திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (07:58 IST)

இந்திய அணிக்கு 'மரண பயம்' காட்டிய தனி ஒருவன்

கிட்டத்தட்ட 350 ரன்கள் எடுத்துவிட்டோம், எதிரணியின் முதல் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டோம், இனி தோல்விக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்த இந்திய அணி வீரர்களுக்கு மரண பயத்தைக் காட்டியிருக்கிறார் நியூஸிலாந்தின் கடைசி நிலை ஆட்டக்காரர்.
 
ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என இருந்த நிலையில், அதிரடியான ஃபார்மில் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் ஸ்ட்ரைக்கில் நின்றார். முதல் பந்தே சிக்ஸ் அடிக்க நியூசிலாந்து அணி வெற்றிக்கு அருகில் நெருங்கியது. 
 
இந்நிலையில் ஷர்துல் தாகூர் வீசிய இரண்டாவது பந்து வைட் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து யார்க்கராக போக, அதனை அடித்து ஆட முயன்ற மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவரது அதிரடியான ஆட்டம் முடிவுக்கு வந்ததோடு, நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவும் கலைந்தது.
 
நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. 
 
போட்டியில் என்ன நடந்தது?
அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது. 
 
டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமான தொடக்கத்தை அளித்த இந்த இணை 60 ரன்களில் உடைந்தது. ரோஹித் ஷர்மா 34 ரன்களை எடுத்து வெளியேறினார். அதன்பிறகு விளையாட வந்த விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முறையே 8 மற்றும் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 
அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் முறையே 31 ரன்கள் மற்றும் 28 ரன்கள் அடித்தனர். இப்படி தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 100 ரன்கள் வரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அவர், அதன் பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி 349 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவியது. 
 
350 என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே தடுமாற தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மட்டும் 40 ரன்கள் அடிக்க மற்ற வீரர்களான சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது நியூசிலாந்து அணி.
 
அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என இந்திய ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏழாவது பேட்ஸ்மேனாக களத்திற்குள் நுழைந்தார் மைக்கேல் பிரேஸ்வெல். தொடக்கம் முதலே அவர் அதிரடியாக விளாச, நியூசிலாந்து அணியின் ரன்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தன. அதிரடியாக விளையாடிய அவர் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி மெல்ல அழைத்துக்கொண்டு போனார். 
 
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டார்.