புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (09:49 IST)

வட மாநில தொழிலாளர் வருகையால் தமிழ்நாட்டில் சில தொழில்களில் சாதிய இறுக்கம் தளர்ந்துவிட்டதா?

தமிழ்நாட்டில் சிகை திருத்துவது, துணிகளைத் துவைப்பது, தூய்மைப் பணிகளைச் செய்வது, சில குறிப்பிட்ட சாதியினர் மீது திணிக்கப்பட்டிருந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
 
இதனால், அந்தத் தொழில்களைச் செய்வோர் மீதான சாதி சார்ந்த பார்வை மாற ஆரம்பித்திருக்கிறதா? முன்பு இந்த வேலைகளைச் செய்தவர்கள், சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட ஆரம்பித்துவிட்டார்களா?
 
தமிழ்நாட்டில் முடி திருத்தும் தொழில், துணி துவைக்கும் தொழில், தூய்மைப் பணி ஆகிய வேலைகளை ஒரு சில சாதியினர் மட்டுமே செய்ய வைக்கப்பட்டு, அவர்கள் அந்தத் தொழிலைச் செய்வதாலேயே பிறரால் ஒதுக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிகரித்த வேலைவாய்ப்புகளும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையும் இந்த நிலையை ஓரளவுக்காவது மாற்றியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
 
குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு சிகை திருத்தும் தொழிலைச் செய்பவர்களை ஒதுக்குவது, ஒரு வீட்டில் மரணம் நிகழும்போது, அந்தத் தொழில் செய்பவர்களையே அழைத்து சடலங்களுக்கான பணிகளைச் செய்யச் சொல்வது ஆகியவை வழக்கமாகவே இருந்தது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான நகர்ப்புரங்களில் சிகையலங்கார நிலையங்கள் அனைத்தும் புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பியுள்ளன. பல நகரங்களில் தூய்மைப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுவதால், அந்தப் பணிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற அடையாளத்தைத் தாண்டி, அவர்கள் செய்யும் பணிசார்ந்த அடையாளத்தால் குறிப்பிடப்படுவதில்லை.
 
புலம்பெயர்ந்து வந்ததால் அவர்கள் புதிய மாநிலத்தில், புதிய நகரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் உழைப்புச் சுரண்டலையும் மோசமான வாழ்விடச் சூழலையும் எதிர்கொள்கிறார்கள் என்றாலும், அவர்கள் சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில்லை.
 
அதேநேரம், தமிழ்நாட்டில் அந்த வேலைகளை அதற்கு முன்பாகச் செய்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டிருப்பதால், அவர்களும் வேறு வேலைகளில் இணைந்து தங்களது பணி சார்ந்த வேறு அடையாளங்களைப் பெறும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
 
இதன்மூலம், புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால், இதுபோன்ற வேலைகளைச் செய்வோர் மீதான பணி சார்ந்த இழிவுபடுத்தல் குறைய ஆரம்பித்துள்ளதா? முன்பு இந்த வேலைகளைச் செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தாங்கள் ஒதுக்கப்பட்டதில் இருந்து விடுபட ஆரம்பித்துவிட்டார்களா?
 
சாதி சார்ந்து ஒதுக்கப்பட்ட வேலைகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்ய ஆரம்பிப்பதால் சாதிய ஒடுக்குமுறை மாறிவிடாது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.
 
"நகரத்தைப் பொறுத்தவரை சலூன் என்பது ஒரு நிறுவனமயமான தொழிலாகிவிட்டிருக்கலாம். ஆனால், கிராமங்களில் இது இன்னமும் சாதியோடு தொடர்புடையதுதான். இன்னமும் கிராமங்களில் சிகை திருத்துவது, சடலங்களை எரிப்பது, விவசாய வேலைகள் ஆகியவை சாதி அடிப்படையிலேயே நடக்கிறது. தற்போது நகரங்களில் வந்திருக்கும் மாற்றம், கிராமங்களிலும் நடந்தால் வேண்டுமானால் இது மாறலாம். இப்போதைக்கு அப்படி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்" என்கிறார் ரவிகுமார்.
2011ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 39 முதல் 40 கோடிப் பேர் வரை உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பிகார், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
 
இவர்கள் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குப் புலம்பெயர்கிறார்கள்.
 
"ஒரு சில சாதியினர் மட்டுமே செய்யவேண்டும் என ஒதுக்கப்பட்டிருந்த தொழில்களை இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்வதற்குக் காரணம், அந்தத் தொழிலில் நடந்த நவீனமயம்தான். இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம் என்று ஆகிவிட்டது. இதன் காரணமாகத்தான் வழக்கமாக இந்த வேலைகளைச் செய்தவர்களுக்குப் பதிலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதைச் செய்கிறார்கள்.
 
ஆனால், கிராமங்களில் இதே வேலையைச் செய்பவர்கள் அல்லது இந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த சமூகத்தினர் இப்போதும் கடந்த காலங்களில் நடத்தப்பட்டதைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். அது மாறுவதே இல்லை," என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான சி. லக்ஷ்மணன்.
தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டில் சென்னை மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டுவந்த ஒரு பலமாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களை அடையாளம் கண்டபோது பெரும்பாலானவர்கள் பிற மாநிலத் தொழிலாளர்களாக இருந்தார்கள். இதையடுத்து, தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் குறித்து ஓர் ஆய்வை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
 
அந்த ஆய்வின்படி, அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சுமார் 10.67 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்ததாகத் தெரிய வந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காகியிருக்கக்கூடும்.
 
"இந்த வேலைகளைச் செய்பவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது மாறுவதில்லை. தூய்மைப் பணி போன்ற வேலைகளை அரசு தற்போது ஒப்பந்த அடிப்படையில் நடத்துவதால், அந்த வேலைகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், வேறு மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையே அழைத்து வந்துதான் அந்த வேலையைப் பார்க்கச் சொல்கிறார்கள்.
 
ஆகவே, ஒடுக்குமுறை வேறொருவருக்கு மாறுகிறதே தவிர, குறிப்பிட்ட வேலையைச் செய்யும் தொழிலாளர்கள் மீதான அழுத்தம் அப்படியேதான் நீடிக்கிறது," என்கிறார் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும் தமிழ்நாடு அலையன்சின் நிறுவனரான பாலமுருகன்.
 
இவர்களில் பெரும் பகுதியினர் அதாவது 27 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும், 14 சதவீதம் பேர் ஜவுளித் துறையிலும் 11.41 சதவீதம் பேர் கட்டுமானத் துறையிலும் பணியாற்றி வந்தனர். மீதமுள்ளவர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
 
அரசு தூய்மைப் பணியை ஒப்பந்ததாரருக்கு தந்தவுடன் அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பாரம்பரியமாக தூய்மைப் பணியைச் செய்யும் தொழிலாளர்களைத்தான் இங்கே அழைத்து வருகிறார்கள் என்கிறார் சேவ் இயக்கத்தின் இயக்குநரான அலாய்சியஸ்.
 
"தமிழ்நாட்டில் ஏற்கெனவே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் தொழிற்சங்கங்கள் வலுவடைந்துவிட்டன. மேலும், பலர் படித்துவிட்டு வேறு வேலைகளுக்கும் போக ஆரம்பித்துவிட்டார்கள்.
 
குறிப்பாக, ஆலைப் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே, இந்தப் பணிகளுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகவேதான் அதேபோன்ற சாதிய படிநிலையில் உள்ள தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். அவர்களது வாழ்விடங்கள், நடத்தப்படும் விதம் எல்லாமே மோசமாகத்தான் இருக்கும்," என்கிறார் அலாய்சியஸ்.
 
வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்டோர்தான். கிட்டத்தட்ட 42 சதவீதம். அதற்கு அடுத்தபடியாக, பழங்குடியினரும் பட்டியலினத்தோரும் சேர்ந்து கிட்டத்தட்ட 35 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 90 சதவீதம் பேர்.
 
இந்தப் பின்னணியில் நிகழும் மற்றொரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். அதாவது, தற்போதைய புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை என்பது கிராமங்களின் சாதிக் கட்டுமானத்தை வலுப்படுத்தவே செய்கிறது என்கிறார் அவர்.
 
"கிராமங்களில் வசிக்கும் பயிற்சி பெறாத தொழிலாளர்கள், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதைவிட கிராமங்கள் தங்கள் மீது திணிக்கும் சாதிய ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்கவே நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால், பயிற்சி பெறாத தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய வேலைகளைச் செய்ய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்துவிட்டார்கள்.
 
ஆகவே, கிராமங்களில் இருந்து நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. ஏற்கெனவே நகரங்களுக்குச் சென்றவர்களும் தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி, எந்த சாதியப் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்தார்களோ, அதே சாதி ஒடுக்குமுறைச் சூழலில் வாழ வேண்டியிருக்கிறது," என்கிறார் அவர்.
 
முதலாளித்துவம் எப்படி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை மறு சீரமைத்துக்கொள்கிறதோ, அதேபோல, சாதியக் கட்டமைப்பும் காலத்திற்கேற்ற வகையில் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகையால் அது பெரிய வகையில் மாறிவிடாது என்கிறார் லக்ஷ்மணன்.