செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (09:35 IST)

துப்பட்டாக்களை தூக்கி எறிந்த பழங்குடியின மாணவிகள் - என்ன நடந்தது?

‘பெண்கள் வெளியே சென்றால் துப்பட்டா போட்டுதான் செல்ல வேண்டுமென்ற நச்சரிப்பு இங்கே தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் பெண்கள்துப்பட்டா போடுவதும், போடாதாதும் அவர்களுடைய விருப்பம். ஒரு பெண் அவருடைய வாழ்வில் என்ன செய்ய வேண்டுமென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்கிறார் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த பழங்குடியின மாணவி.
 
நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்களது துப்பட்டாக்களை, மாடியிலிருந்து தூக்கி எறிவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் தமிழ் எழுத்தாளர்கள் கீதா இளங்கோவன் மற்றும் நிவேதா லூயிஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.
 
அவர்களை பார்த்து உற்சாகமாக ஆர்பரித்தப்படியே மாணவிகள் தங்களது துப்பாட்டக்களை தூக்கி எறிகின்றனர். என்ன நடந்தது அங்கே? மாணவிகளிடம் ஏற்பட்ட அத்தகைய உற்சாகத்திற்கு என்ன காரணம்?
 
பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அவசியம்
 
‘Aware India’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, மாணவர்கள் மத்தியில் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளி மாணவிகளை ஒருங்கிணைத்து, தற்போது அவர்களுக்காக விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த விழிப்புணர்வு முகாமில்தான் இத்தகைய நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது.
 
பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வையும், பெண்களின் உடல் மீதான புரிதலையும் ஏற்படுத்துவதில், வாசித்தல் பழக்கங்கள் பெருமளவு பங்கு வகிக்கின்றன. அப்படியான ஒரு புத்தக வாசித்தல்தான் இந்த பழங்குடி மாணவிகளிடமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
 
“துப்பட்டா போடுங்க தோழி” என்று எழுத்தாளர் கீதா இளங்கோவன் எழுதிய புத்தகத்தை மாணவிகளிடம் வாசித்தலுக்காக கொடுத்திருக்கிறது, ‘Aware India’ தொண்டு நிறுவனம். அந்த புத்தகத்தை வாசித்ததற்கு பின்னால் தங்களுக்கு தங்களது உடை சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த சமூக அழுத்தத்தின் உண்மை நிலை புரிந்ததாகவும், அதிலிருந்து தற்போது தாங்கள் தெளிவுபெற்றிருப்பதாகவும் அந்த மாணவிகள் கூறுகின்றனர்.
 
"மாணவிகளுக்கு ’ பாலியல் கல்வி’அவசியம்"
பிபிசி தமிழிடம் பேசிய ‘Aware India’ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தியன், “மாணவ மாணவிகளிடையே பாலியல் கல்வி என்பது மிகவும் அவசியம்.
 
குறிப்பாக இதுபோன்ற பழங்குடியின மாணவிகளிடையே இன்றும் குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு பெண்களுடைய உரிமைகள் குறித்தும், பாலியல் கல்வி குறித்தும் புரிதல்கள் ஏற்படுத்துவது அவசியம். அதற்கான முயற்சிகளில்தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.
 
"விருதுக்கு நிகராக உணர்கிறேன்"
 
 
”என்னுடைய எழுத்தின் மூலம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் இத்தகைய மாற்றத்தை காணமுடிந்திருக்கிறது. என் வாழ்வின் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இதை கருதுகிறேன்” என்கிறார் எழுத்தாளர் கீதா இளங்கோவன்.
 
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே இன்றளவும் குழந்தை திருமணங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதுபோன்ற விஷயங்களில் அம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகளில் ‘Aware India’ தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களிடம் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் கொடுத்து அவர்களிடையே வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தி வந்தது. நிவேதா லூயிஸின் ’முதல் பெண்கள்’, நாராயிணி சுப்ரமணியனின் ‘விலங்குகளும் பாலினமும்’ போன்ற பல புத்தகங்களுடன் என்னுடைய ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற புத்தகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
அப்படி அவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து உரையாடுவதற்கும், தங்களுடைய சந்தேகங்கள் தொடர்பாக கேள்வி கேட்பதற்கும், முகாமின் ஒரு பகுதியாக ’அவளதிகாரம்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். கள்ளகுறிச்சியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காகத்தான் நிவேதா லூயிஸையும், என்னையும் அழைத்திருந்தார்கள்.
 
அங்கே சென்றபின் தான் எங்களுக்கு தெரிந்தது, மாணவிகள் இந்த அளவிற்கு அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துகளை உள்வாங்கியிருக்கிறார்கள் என்று. அவர்கள் அனைவரும் ஒன்றாக மாடியிலிருந்து என்னை பார்த்து ஆர்பரித்ததும், துப்பட்டாவை தூக்கி எறிந்ததும் நான் சற்றும் எதிர்பாராதது” என்கிறார் கீதா இளங்கோவன்.
 
மேலும் அவர் கூறும்போது, “ பெண்கள் உடல் சார்ந்தும், உடை சார்ந்தும், உரிமை சார்ந்தும் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியலை விளக்கும் வகையிலான கருத்துக்களை ‘துப்பட்டா போடுங்க தோழி’ புத்தகத்தில் கூறியிருக்கிறேன். ஆனால் அது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடையே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
 
கிட்டதட்ட 170 மாணவிகள் அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் துப்பட்டாவை தூக்கி எறிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, ’எங்கள் உடல், எங்கள் உரிமை’ என்ற கருத்தை உணர்த்தும்விதமான குறியீடாகவே நான் அவர்களின் செயலை பார்த்தேன். அந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அந்த சமயம் அது வீடியோவாக எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது” என்கிறார்.
 
அவர் தொடர்ந்து பேசுகையில், “அந்த மாணவிகளிடம் நிகழ்ந்த உரையாடலின்போது, இந்த புத்தகத்தில் எது உங்களை அதிகமாக கவர்ந்தது என்ற கேள்வியை நான் முன்வைத்தபோது, ‘ஒரே ஒரு காதல் ஊரில் இல்லையடா’ என்ற தலைப்பு மிகவும் பிடித்ததாக ஒரு மாணவி எழுந்து கூறினார். ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இவ்வளவு அழகாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த கருத்துகளை புரிந்துக்கொண்டிருந்தது நினைத்து எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
 
இத்தகைய புரிதல்கள் பெண் குழந்தைகளிடம் ஏற்படுவது மிகவும் அவசியம் என நினைக்கிறேன். குறிப்பாக பழங்குடி மக்களிடைய குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வரும் சூழலில், அவர்களின் அடுத்த தலைமுறையான இந்த மாணவிகளிடம் ஏற்பட்டிருக்கும் இத்தகைய புரிதல்களும், மாற்றங்களும் முக்கியமானவையாக கருதுகிறேன். என் புத்தகமும் அதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது, ஒரு பெரிய விருதினை பெற்ற நிறைவு ஏற்பட்டிருக்கிறது ” என்கிறார் எழுத்தாளர் கீதா இளங்கோவன்.
 
"பெண்கள் மேல் சமூக அழுத்தம் இருக்கிறது"
‘பெண்கள் வெளியே சென்றால் துப்பட்டா போட்டுதான் செல்ல வேண்டுமென்ற நச்சரிப்பு இங்கே தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஒருவர் துப்பட்டா போடுவதும், போடாதாதும் அவருடைய விருப்பம். ஒரு பெண் அவருடைய வாழ்வில் என்ன செய்ய வேண்டுமென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த பழங்குடியின மாணவி.
 
அவர் தொடர்ந்து பேசுகையில், “எங்களுக்கு வழங்கப்பட்ட ’துப்பட்டா போடுங்க தோழி’ என்ற புத்தகத்தை நாங்கள் அனைவருமே படித்தோம். ஒரு பெண் என்றால் இப்படிதான் இருக்க வேண்டுமென்று இங்கே நிறைய கற்பிதங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் உடையிலிருந்து, அவர்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது வரை ஒரு பெண் இதுதான் செய்ய வேண்டும், இது செய்யக்கூடாது என்று பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் இது எதுவுமே பெண்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். எங்களுக்கு இருந்த நிறைய சந்தேகங்கள் இந்த புத்தகத்தின் மூலம் தெளிவடைந்திருக்கிறது” என்கிறார்.
 
மேலும், “இதுபோன்ற புத்தகங்களை படிப்பதற்கு முன்னாள் நாங்களும், இந்த சமூகத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டு, அடுத்தவரின் சொல்படி நடந்துவந்தோம். ஆனால் தற்போது இத்தகைய புத்தகங்களை படிப்பதன் மூலம் நிறைய புரிதல்கள் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ அதைதான் செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். என்னைபோலவேதான் என் சக மாணவிகள் அனைவருமே உணர்கிறார்கள். எனவே இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் வருகிறார் என்று தெரிந்தவுடன், அவரை வரவேற்கும் விதமாகவும், எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் எங்களது துப்பட்டாக்களை தூக்கி எறிந்தோம்” என்று கூறுகிறார் அந்த மாணவி.
 
”எங்களுக்கு துப்பட்டா போடுவது பிடிக்காது. இத்தனை நாட்கள் மற்றவர்களின் நச்சரிப்புக்காக துப்பட்டா அணிந்து வந்தோம். இப்போது எங்களில் பெரும்பாலானவர்கள் துப்பட்டா அணிவதை விட்டுவிட்டோம்” என்று மகிழ்ச்சியான குரலில் குறிப்பிடுகிறார் அந்த மாணவி.