ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (07:03 IST)

H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி?

நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விரிவான விளக்கம் அளித்துள்ளது.
 
கோவிட்-19 போன்ற அறிகுறிகளுடன் இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), இந்திய மருத்துவ கூட்டமைப்பும் (IMA) அடையாளப்படுத்தியுள்ளன.
 
H3N2 வைரஸ் பரவலை காற்று மாசு தீவிரப்படுத்தும் என்பதால், மற்ற இன்ஃப்ளூயன்சா துணை வகை வைரஸ்களைக் காட்டிலும் இது வேகமாக பரவுவதாக வைராலஜிஸ்ட் கூறுகின்றனர்.
 
H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன?
 
மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.
 
ஐ.சி.எம்.ஆர். ஆய்வுகளின் படி, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள், முதியோர், இணை நோய் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் H3N2 வைரஸ் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பு உண்டு.
பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும்.
95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.
சுய மருத்துவம் கூடாது. அது ஆபத்தானது. பொன்னான நேரத்தை அதில் வீணாக்கி விடக் கூடாது.
குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 1
H3N2 வைரஸ் பரவாமல் தடுக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்? எதை செய்யலாம்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
 
H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் ஐ.சி.எம்.ஆர். வழங்கியுள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
 
எதையெல்லாம் செய்ய வேண்டும்?
 
முகக்கவசம் அணிவது அவசியம்
கூட்ட நெரிசலாக இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்
தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும்
கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்
தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
காய்ச்சல், உடல் வலிக்கு பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம்
எதையெல்லாம் செய்யக் கூடாது?
 
கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது
பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது
மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது
மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது
மழை மற்றும் குளிர்காலத்தின் போது பெரும்பான்மையோருக்கு வந்து செல்லும் சாதாரண காய்ச்சல் தொற்று இது. எனினும், குழந்தைகள், முதியோர் மற்றும் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
 
குழந்தைகளுக்கு H3N2 வைரஸ் குறித்து சென்னையில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் மருத்துவரும், குழந்தைகள் நல மருத்துவருமான ராவணகோமகனிடம் பேசினோம்.
 
ஆண்டுதோறும் மழை மற்றும் குளிர் காலத்தின் போது வரக் கூடிய காய்ச்சல் இது, அதற்குக் காரணமான HN வகை வைரஸ்களில் ஒன்றே தற்போது பரவும் H3N2 வைரஸ் என்று அவர் கூறினார்.
 
காலநிலை மாற்றத்தின் விளைவாக, தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரிக்குப் பிறகும் குளிர் நீடிப்பதால்தான் இந்த காய்ச்சல் தற்போதும் பரவி விருவதாக அவர் தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில், "முகக்கவசம், சோப் போட்டு அடிக்கடி கை கழுவுதல், கூட்டத்தில் இருப்பதை தவிர்த்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளையே இதற்கும் கையாள வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்." என்றார்.
 
"குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுடையவர்கள் ஆகியோருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம். அவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம். மற்றவர்களைப் பொருத்தவரை, வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் மிதமாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வீட்டிலேயே இருக்கலாம். பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நல்ல ஓய்வும், சூடான தண்ணீரை பருகுவதும் சிறந்த பலன் கொடுக்கும். இதன் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் ராவணகோமகன் தெரிவித்தார்.
 
"H3N2 வைரஸ் திரிபு உருவாகக் கூடும் என்பதால் ஒருமுறை இந்த பாதிப்புக்கு ஆளாகி மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்றக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆகவே, குழந்தைகளை பெற்றோர் மிகுந்த கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.
 
கூடுதல் பாதுகாப்பாக, ஆண்டுக்கு ஒருமுறை இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளை 70 சதவீதம் வரை குறைக்கலாம் என்றார் அவர்.
 
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய் போன்ற இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ராவணகோமகன் அறிவுறுத்தினார்.