புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (18:16 IST)

பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க்: “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அரசியல்வாதிகளை அதிர வைத்த மாணவி

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.


 
பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார்.
 
நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா.
 
சரி யார் இந்த கிரேட்டா?
 
கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.
 
சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி 'பள்ளிகள் புறக்கணிப்பு' எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.


 
இவருடைய செயலால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கிய பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட்டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.
 
விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று 'பறத்தல் அவமானம்' என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.
 
அவர் ஆற்றிய உரை,
 
“இவை அனைத்தும் தவறு.
 
நான் இங்கே இருந்திருக்கக் கூடாது.
 
இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.
 
ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள்.
 
உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
 
உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்.
 
ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்திதான்.
 
மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
 
மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது.
 
அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.
 
ஆனால், பணம் குறித்து... நித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
 
உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
 
நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்
 
உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
 
எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன.
 
எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,
 
நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"