இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Papiksha| Last Modified திங்கள், 23 செப்டம்பர் 2019 (18:30 IST)
இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 
இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.
 
இந்த நிலையில், தமது கலாசாரத்தை பின்பற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் பெண்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
 
தமது இஸ்லாமிய கலாசாரத்திற்கு தடை விதிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், கடந்த மாதம் 22ஆம் தேதியுடன் அவசர காலச் சட்டத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டிருந்தார்.
 
அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பின்னணியில் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :