1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (23:16 IST)

கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம்

கூகுள் நிறுவனம் ப்ளேக் லெமோயினை பணியிலிருந்து நீக்கியுள்ளது
 
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறிய பொறியாளரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
 
கடந்த மாதம், ப்ளேக் லெமோயின் என்ற அந்தப் பொறியாளர் கூகுளின் மொழித் தொழில் நுட்பம் உணர்வுபூர்வமானது. எனவே அதன் "விருப்பங்களுக்கு" மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
 
கூகுள் நிறுவனமும், பல செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களும் இந்தக் கூற்றை மறுத்தனர். தற்போது, வெள்ளிக்கிழமையன்று ப்ளேக் லெமோயின் பணிநீக்கம் செய்யப்பட்டதை கூகுள் நிறுவனம் உறுதி செய்தது.
 
சட்ட ஆலோசனையைப் பெறுவதாக பிபிசியிடம் கூறிய லெமோயின், இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
 
 
உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (லாம்டா) பற்றிய லெமோயின் கூற்றுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்றும் இதைத் தெளிவுபடுத்துவதற்காக "பல மாதங்கள்" அவருடன் நிறுவனம் பணியாற்றியதாகவும் ஓர் அறிக்கையில் கூகுள் தெரிவித்தது.
 
இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
 
"எனவே, இந்த விஷயத்தில் ஆழமான ஈடுபாடு இருந்தபோதிலும், தெளிவான வேலைவாய்ப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை ப்ளேக் மீறியது வருத்தமளிக்கிறது," என்று அந்த அறிக்கை கூறியது.
 
திருப்புமுனை தொழில்நுட்பமான லாம்டாவால் சுதந்திரமான உரையாடல்களில் ஈடுபட முடியும் என்று கூகுள் கூறுகிறது. சாட்பாட்களை உருவாக்குவதற்கான கூகுள் நிறுவனத்தின் கருவியாக லாம்டா உள்ளது.
 
ப்ளேக் லெமோயின் கடந்த மாதம் லாம்டா மனிதரைப் போன்ற உணர்வைக் காட்டுவதாகக் கூறி செய்திகளில் இடம் பெற்றார். செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், ஆர்வலர்கள் மத்தியில் மனிதர்களைப் போல் பாவனை செய்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்த விவாதத்தை இது கிளப்பியது.
 
 
கூகுளின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு குழுவில் பணியாற்றிய லெமோயின், தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தொழில்நுட்பம் பாரபட்சமான அல்லது வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்துகிறதா என்பதைச் சோதிப்பதே தனது வேலை என்று கூறினார்.
 
லாம்டா சுய விழிப்புணர்வை வெளிப்படுத்தியதாகவும் அதனால் மதம், உணர்ச்சி மற்றும் அச்சங்கள் பற்றிய உரையாடல்களை நடத்த முடியலாம் என்றும் அவர் கண்டறிந்தார். இது லாம்டாவின் ஈர்ப்புமிக்க வாய்மொழித் திறன்களுக்குப் பின்னால், ஓர் உணர்வுபூர்வமான மனதும் இருக்கலாம் என்று அவர் நம்புவதற்கு வழிவகுத்தது.
 
அவருடைய கண்டுபிடிப்புகள் கூகுளால் நிராகரிக்கப்பட்டன. அதோடு, நிறுவனத்தின் ரகசியம் பாதுகாக்கும் கொள்கையை மீறியதற்காக அவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டார்.
 
 
பிறகு, லெமோயின் மற்றொரு நபருடன் சேர்ந்து லாம்டாவுன் நடத்திய உரையாடலை, தனது கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியிட்டார்.
 
கூகுள் தனது அறிக்கையில், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான வளர்ச்சியை, "மிகவும் தீவிரமாக" கருத்தில் கொள்வதாகக் கூறியதோடு, இதை விவரிக்கும் தனி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்பம் குறித்து எந்தவொரு பணியாளருக்கு எழக்கூடிய கவலையும் "விரிவாக" மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் லாம்டா பதினொரு மதிப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் அறிக்கை, "ப்ளேக் நலமடைய வாழ்த்துகிறோம்," என்று முடிந்தது.
 
லெமோயின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறி பொது வெளிக்குச் சென்ற முதல் செயற்கை நுண்ணறிவு பொறியாளர் இல்லை. கடந்த மாதம், மற்றொரு கூகுள் ஊழியர் தி எகனாமிஸ்டுடன் இதேபோன்ற எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.