1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக,  நாடாளுமன்றம் நோக்கி இன்று டிராக்டர் ஓட்டிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட அம்மாநில எம்.பி.க்கள் சிலருடன் இன்று காலை தமது வீட்டில் இருந்து ராகுல் காந்தி டிராக்டரில்  நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். இதனால், அவர் செல்லும் வழிநெடுகிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள், அரசைப் பொருத்தவரை தீவிரவாதிகள். ஆனால்,  உண்மையில் இந்த சட்டங்கள் ஒன்று இரண்டு கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே உள்ளன," என்று தெரிவித்தார்.
 
"வீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவே தமது வீட்டில் இருந்து  நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டி வந்தேன்," என்று ராகுல் காந்தி கூறினார்.
 
இதற்கிடையே, கட்டுப்பாட்டு விதிகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி  நோக்கி டிராக்டரில் வந்த ஆதரவாளர்கள் செல்ல காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சூர்ஜிவாலா முயன்றார்.
 
அவரை நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகம் அருகே வழிமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.