நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!
சமீபத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், அவர் எந்த வழக்கையும் விசாரணை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முடிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் சமீபத்தில் தீப்பிடித்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தீயில் எரிந்த நோட்டுகள் ₹11 கோடியாகவும், எரியாத நோட்டுகள் பல கோடியாகவும் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப் -ஹரியானா தலைமை நீதிபதி, ஹிமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆகிய மூவரும் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு விரைவில் விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிக்கையை அனுப்பும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், நீதித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva