1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (13:48 IST)

பட்ஜெட் 2022 - தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?

ஆயிரமாயிரம் ஆசைகள். எந்தவொரு பட்ஜெட் பற்றியும் பேசுவதற்கு இந்த வரியிலிருந்து தொடங்கலாம். ஆனால், இந்த முறை நிலைமை வேறாக உள்ளது.

ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஆசைகளை விட நிர்பந்தங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்கு ஏதோ ஒன்று தேவை என்பது மத்திய அரசுக்கு தெரிந்துள்ளது.
 
மற்றவர்களுக்கு ஏதோ ஒன்றை கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களும், அரசிடமிருந்து இருந்து பல்வேறு எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றனர். அனைவரது விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றுவது, யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாதோ, அவர்களுக்கு அதை எப்படி விளக்குவது என்பதுதான் நிதி அமைச்சர் முன் உள்ள சவாலாக தற்போது உள்ளது.
 
மத்திய அரசு அப்படி விளக்கினாலும், தலை மீது கத்தி தொங்குவதைப் போல, ஐந்து மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநில மக்களை நம்ப வைக்க முயற்சிப்பதற்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டி இருக்கும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன என்றாலும், இந்த ஐந்து மாநிலங்கள், குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு சற்று முன் வரவிருக்கும் பட்ஜெட், தேர்தலை ஒட்டிய பட்ஜெட்டாகவே கருதப்படும் என்று பட்ஜெட்டுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்ட வல்லுநர்கள் நம்புகின்றனர்.
 
தேர்தல் பட்ஜெட்டிற்கு மற்றொரு பெயர் உள்ளது - பாப்புலிஸ்ட் பட்ஜெட் என்று அதை ஆங்கிலத்தில் சொல்லலாம். (தமிழில் சொன்னால், கவர்ச்சி பட்ஜெட் எனலாம் அதை)
 
அதாவது, கேட்டவுடன் மக்கள் மனம் மகிழும்படியான அறிவிப்புகளை அது கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவையும் கவர்ந்திழுக்கும் முயற்சி இருக்கும். குறிப்பாக, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியவர்களையும், தங்களின் பலத்தை காட்டியவர்களையும் கவரும் முயற்சி நடக்கும். தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் அவர்களின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.

இப்போது விவசாயிகள், கிராமப்புற மக்கள், இளைஞர்கள், ஏழ்மையில் உள்ளவர்கள், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அரசு ஊழியர்கள், சிறு வியாபாரிகள், பெரு வியாபாரிகள், பெரிய மற்றும் சிறு தொழிலதிபர்கள் என எண்ணிப் பாருங்கள். இப்படி, வாக்கு வங்கிகளாகப் பார்க்கக்கூடிய பல பிரிவுகள் உள்ளன. தேர்தலுக்கு முன் இந்த மக்களை மகிழ்விக்க அரசு முயற்சிப்பது இயல்புதான்.
 
ஆனால், அரசின் மகிழ்ச்சி?
இந்தக் கண்ணோட்டத்தில், பட்ஜெட்டை நோக்கினால், பெரிய முன்னேற்றம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. முன்னேற்றம் என்பது பொருளாதார வல்லுநர்கள் பட்ஜெட் குறித்து பேசும் முடிவுகளாகும். எந்த ஒரு பிரிவினரையும் மகிழ்விக்க அரசு முயற்சி செய்யும் பட்சத்தில், அது தனது வருமானத்தை குறைக்கிறது.

அதாவது வரியில் ஏதேனும் விலக்கு அளிக்கிறது அல்லது ஏதோ ஒன்றை விநியோகம் செய்யும் அறிவிப்பு என்பதே வல்லுநர்களின் கவலைக்கு மிகப்பெரிய காரணம். இரண்டு விஷயங்களிலும், அரசு கஜானாவின் சுமை அதிகரிக்கிறது. அதனால்தான் பொருளாதார வல்லுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடையவில்லை.
 
ஆனால், இம்முறை நிலைமை சற்று வித்தியாசமானது. சமூகத்தின் மிகப் பெரிய பிரிவினருக்கு ஆதரவு தேவை என்றும், அந்த ஆதரவு வழங்கப்படாவிட்டால், பொருளாதாரத்தில் வேகம் பிடிப்பது மிகவும் கடினம் என்றும் பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
மறுபுறம், இந்த நேரத்தில் வருமானத்தைப் பற்றி மத்திய அரசு கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிகிறது. மாறாக, தனது செலவினத்தை எப்படி அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். அத்தகைய நேரத்தில், அரசு அதிகம் செலவிடுவது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திற்காக இருக்குமா அல்லது அரசின் நம்பகத்தன்மையை நிலைநாடுவதற்காக இருக்குமா?
 
மத்திய அரசின் வருமானத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட சற்று சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, கடந்த பட்ஜெட்டில் அரசுக்கு அனைத்து துறைகளிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது அரசுக்கு மேலும் இரண்டரை லட்சம் கோடி வரப் போகிறது எனத் தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் வரி வசூலில் உள்ள வேகம்தான். கடந்த ஆறு மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் மட்டுமே அரசுக்கு கிடைத்துள்ளது. பொருளாதாரம் வேகம் பெற்றுள்ளது என்பதுதான் இதன் அர்த்தம்.
 
மறுபுறம், நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் முடிவுகளைப் பார்த்தால், அதிலும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவுக்குப் பிறகு, அவர்களின் லாபம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றும் அத்தகைய வளர்ச்சியே காணப்படுகிறது. இவற்றின் மூலம் அரசின் மொத்த வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெரும் பகுதி கார்ப்பரேட் வரியில், அதாவது 60 சதவீதமும், வருமான வரியில் 32 சதவீதமும் கிடைத்துள்ளது. மொத்தம், அரசின் நேரடி வரி வசூல் ரூ.13.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். இது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டை விட 46 சதவீதம் அதிகமாக இருக்கும். ஆனால், அரசின் வருமானம் 69.8% அதிகரித்திருப்பது அரசு இது குறித்த விவரங்களை முழுவதும் காட்டவில்லை என்பதை குறிக்கிறது.
 
அதாவது, அரசு விரும்பினால், அத்தியாவசியப் பொருட்களுக்குச் செலவு செய்யலாம் அல்லது அதன் செலவை அதிகரிக்கலாம். ஆனால், இந்த ஆண்டு, அரசு செலவழிக்க வேண்டிய 34.8 லட்சம் கோடி ரூபாயில் 60 சதவீதம் கூட செலவழிக்கவில்லை என்பதையும் கணிக்க முடிகிறது. அதே சமயத்தில், அரசின் வருவாய் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதிகம் சம்பாதிப்பதும் குறைவாக செலவு செய்வதும் பற்றாக்குறையைக் குறைப்பதாகும்.

ஆனால், இந்த சூழ்நிலையில், பற்றாக்குறையை விட பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதே அரசின் பெரும் கவலையாக உள்ளது. ஒருவேளை, அதனால்தான், செலவை எப்படி அதிகரிப்பது, எங்கு அதிகரிப்பது என்பதே இப்போது நிதியமைச்சருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.
 
மத்திய அரசு பல்வேறு கூற்றுக்களையும் விளக்கங்களையும் அளித்த பிறகும், கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் என்று கூறிய பொருளாதார வல்லுநர்கள், அது அனைவருக்கும் சமமாக அளிக்கப்படவில்லை என்று கூறுவதும் கவலைக்குறிய விஷயம்.

சில பிரிவுகள் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும், சில பிரிவுகள் இன்றும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இது ஆங்கில எழுத்து 'K- வடிவ மீட்பு' என்று அழைக்கப்படுகிறது. K (கே) என்ற ஆங்கில எழுத்தின் இரண்டு குச்சிகளைப் போல சமூகத்தில் சில பிரிவினர் வேகமாக உயர்ந்து வருகின்றனர்
 
சிலர் மீண்டும் விழுவது போல் தெரிகிறது. முன்னேறி செல்பவர்களின் உதவியை பெற்று, அவர்களின் வேகம் கூட தடைப்படாமல் இருக்க, அதனை எளியவர்கள் ஆதரிப்பதற்கான வழியை எப்படி கண்டுபிடிப்பது என்பதும் அரசுக்கு சவாலான ஒன்றே.
 
இந்த நேரத்தில், யாருக்கு என்ன தேவை என்று தொழில், வர்த்தகம் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து கோரிக்கைகளின் நீண்ட பட்டியல் ஏற்கனவே மத்திய அரசிடம் வந்துள்ளது. தொழில் நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் பட்ஜெட்டுக்கு முன் நிலைமையைப் பற்றிய தங்கள் தனிப்பட்ட பகுப்பாய்வுகளையும் அதைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.
 
கோரிக்கைகளும் பரிந்துரைகளும் ஒன்று இரண்டல்ல; பல நீண்ட பட்டியல்கள் உள்ளன. ஆனால், இச்சமயத்தில், அரசு தனது கஜானாவை திறக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். சமூகத்தில் உதவி தேவைப்படும் பிரிவினர்களுக்கும், வீழ்ச்சியடைந்து வரும் வணிகங்க நிறுவனங்களுக்கும் உதவ வேண்டும். தேவைப்பட்டால், வணிகம் மற்றும் வருமானம் அபரிமிதமாக உள்ள மக்களிடமிருந்து சில உதவிகளைப் பெற ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்.