செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (14:19 IST)

மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: இந்த மாதத்தில் ஏழாவது சோதனை

2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது.

வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு நேரப்படி 07:52 மணிக்கு (22:52 ஜிஎம்டி) ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை சோதனை இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் 7வது சோதனையாகும்.

வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்வதற்கு எதிராக ஐநா கடுமையான தடைகளை விதித்துள்ளது.

ஆனால், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா இந்த தடைகளைத் தொடர்ந்து மீறி வருகிறது. மேலும், அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங்-உன் தன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே இவற்றைச் செய்வதாக கூறுகிறார்.

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இச்சோதனையில் ஐ.ஆர்.பி.எம் எனப்படும் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது, நவம்பர் 2017-க்குப் பிறகு சோதனை செய்யப்பட்ட மிகப்பெரிய ஏவுகணையாகும்.

ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள், இந்த ஏவுகணை 2,000 கி.மீ. (1,240 மைல்கள்) உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ (500 மைல்கள்) தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஏவுகணை, ஜப்பான் கடலில் விழுந்தது.

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை வெளியிட்ட அறிக்கை வாயிலாக, "மேலும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருங்கள்" என வடகொரியாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் பெரிய ஏவுகணைச் சோதனையை நடத்துவதற்கு முன்பே, இந்த ஜனவரி மாதம் வடகொரியாவின் ஏவுகணைத் திட்டத்தில் ஒரு பரபரப்பான மாதமாகிவிட்டது. பல குறுகிய தூர ஏவுகணைகளை அந்த நாடு இந்த மாதத்தில் ஏவியிருந்தது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், சமீபத்திய ஏவுகணை சோதனைகள், 2017ல் அதிகரித்த பதற்றங்களை நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அச்சமயத்தில் வடகொரியா பல அணுசக்தி சோதனைகளை நடத்தியது. மேலும், ஜப்பான் மீது பறந்த ஏவுகணை உட்பட மிகப்பெரிய ஏவுகணைகளை ஏவியது.

2018ம் ஆண்டில் அணு அயுதங்கள் அல்லது அதன் நீண்ட தொலைவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு கிம் தடை விதித்தார்.

ஆனால், 2019ல் அத்தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக, ஜனவரி தொடக்கத்தில் வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடங்கியது.