செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (19:35 IST)

குஜராத்தில் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் காவல் அதிகாரி முன் வெட்டிக் கொலை

அஹமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த தலித் ஒருவர், காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான ஹரேஷ் சோலங்கி, இரண்டு மாத கர்ப்பமான தனது மனைவி ஊர்மிளா ஜாலாவை, அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வர சென்றார். அவர் செல்லும்போது மாநில பெண்கள் உதவி ஆலோசகர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கூட்டிச் சென்றுள்ளார்.

அப்போது காரில் ஆயுதங்கள் ஏந்திய எட்டு நபர்கள் வந்து தாக்கியதில் ஹரேஷ் உயிரிழந்தார்.

அந்த கான்ஸ்டபிளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடன் இருந்த பெண்கள் உதவி ஆலோசகர் பாவிகா நவ்ஜிபாய் பின்னர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

காரில் வந்து தாக்கிய எட்டு பேரில் ஒருவர் பிடிபட்டார். மீதமிருந்த ஏழு நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

கட்ச் பகுதியில் உள்ள வர்சமொடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரேஷ் சோலங்கி. ஊர்மிளா ஜாலா, அஹமதாபாத்தில் உள்ள மண்டல் மாவட்டத்தின் வர்மொர் கிராமத்தை சேர்ந்தவர். ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த இரு மாதங்களாக ஊர்மிளா தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். அவர்கள் ஏதேனும் பிரச்சனை செய்வார்களோ என்ற அச்சத்தில் ஹரேஷ், பெண்கள் உதவி மையத்தின் பாதுகாப்போடு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

"அவரது மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஹரேஷ் என்னிடம் கூறினார். அவரது மனைவியை கூட்டி வருவதற்கு அவரது மாமனாரை சமாதானப்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்" என அபயம் உதவி மையத்தை சேர்ந்த நவ்ஜிபாய் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
 
குஜராத் அரசாங்கம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர உதவிக்காக அபயம் என்ற ஹெல்ப்லைன் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த மையம் காவல்துறையோடு இணைந்து செயல்படும்.

இவர்களோடுதான் ஹரேஷ், வர்மொர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் தஷ்ரத்சின் ஜாலாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று ஹரேஷை எச்சரித்தே, நவ்ஜிபாய் அவரை கூட்டிச் சென்றுள்ளார்.

"அதுமாதிரி எதுவும் நடக்காது என்று ஹரேஷ் என்னிடம் கூறினார். ஊர்மிளாவின் தந்தைக்கு தன்னை தெரியும் என்றும் தனது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போக வேண்டும் என்று விருப்பப்பட்டதாகவும் சொன்னார்.
அவர்களின் வீட்டை தொலைவில் இருந்து காண்பிப்பதாகவும் ஹரேஷ் கூறினார்" என நவ்ஜிபாய் தெரிவித்தார்.

அபயம் உதவி மையத்தின் ஆலோசகர் பவிகா, பெண் கான்ஸ்டபிளான அர்பிதா லிலாபாய் மற்றும் ஓட்டுநர் சுனில் சோலங்கி ஆகியோரும் சென்றனர். அர்பிதா மற்றும் பவிகா இருவரும் தஷ்ரத்சின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஹரேஷ் வாகனத்தினுள்தான் அமர்ந்திருந்தார்.

ஹரேஷின் மனைவி ஊர்மிளா, அவரது தந்தை தஷ்ரத்சின், சகோதரர் இந்தரஜித்சின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களோடு 15-20 நிமிடங்கள் பவிகா பேசினார்.
 

பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊர்மிளாவின் குடும்பம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டதையடுத்து அவர் அங்கிருந்த சென்றார்.

வாகனம் வரை பவிகாவுடன் வந்த தஷ்ரசின், காரில் அமர்ந்திருந்த ஹரேஷை பார்த்திருக்கிறார்.

முதல் தகவல் அறிக்கைப்படி, ஹரேஷை பார்த்த தஷ்ரத்சின், "இவன்தான் நம் பெண்னை கூட்டிச் சென்றவன். அவன் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருக்கிறான். அவனை காரில் இருந்து வெளியே இழத்து கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

ட்ராக்டர்கள் மற்றும் பைக்குகளுடன் வாகனத்தை சுற்றி வளைத்த எட்டு பேர், அதில் இருந்த அதிகாரிகளை கத்தி மற்றும் வாள்கள் கொண்டு தாக்கத் தொடங்கினர்.

இதில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் அர்பிதா, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால், அதற்குள் ஹரேஷ் உயிரிழந்துவிட்டார். தகவல் கொடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மண்டல் போலீஸார் அங்கு வந்தனர். பின்னர் ஹரேஷின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

"ஹரெஷின் குடும்பம் அவரது வருமானத்தை நம்பிதான் இருக்கிறது. அவரை கொன்றுவிட்டனர்" என்று ஹரேஷின் மாமா ஷாந்திலால் தெரிவித்தார்.
பாதுகாவலராக பணியாற்றி வந்த ஹரேஷின் தந்தை, தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக ஹரேஷ் பணியாற்றி வந்தார்.
"குற்றவாளிகள் எட்டு பேரில் ஒருவரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கை விசாரிக்க ஐந்து குழுக்களை அமைத்துள்ளோம்" என்று அஹமதாபாத் கிராமப்புற எஸ்.பி ஆர்.வி அசரி தெரிவித்தார்.