இலங்கையில் இஸ்லாமியச் சட்டப் படி 20 பேர் கொலை? பெளத்த பிக்கு குற்றச்சாட்டு - விசாரணை ஆரம்பம்
இலங்கையில் ஷரியா சட்டத்துக்கு (இஸ்லாமிய சட்டம்) அமைவாக 20 பேர் கொல்லப்பட்டனர் என்று, மெதகொட அபயதிஸ்ஸ எனும் பௌத்த பிக்கு வெளியிட்ட தகவல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தேரர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இந்தத் தகவலை தெரிவித்திருந்ததாகவும் அந்த பிக்கு கூறினார்.
வட்டிக்கு பணம் கொடுத்தமை, பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டமை, அரசுக்கு உளவாளியாகச் செயற்பட்டமை, சூது விளையாடியமை உள்ளிட்ட செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட 20 பேர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட்டதாக அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.
இந்த விவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கப் போவதில்லை என்றும், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்த தகவல்களை வழங்குவதற்கு, தான் தயாராக உள்ளதாகவும், தேரர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து, பதில் போலீஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.