செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 6 ஜூலை 2019 (18:07 IST)

சீன முஸ்லிம்கள்: குழந்தைகளை குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கும் ஜின்ஜியாங் பள்ளிகள்

சீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய புலனாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதேசமயத்தில் பல நூறாயிரம் மக்கள் பிரமாண்டமான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உறைவிடப் பள்ளிகளைக் கட்டுவதற்கு பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

பொதுவெளியில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், வெளிநாடுகளில் உள்ள பல குடும்பத்தினரிடம் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையிலும், அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி மிகவும் விரிவான ஆதாரங்கள் சிலவற்றை பிபிசி சேகரித்துள்ளது.

ஒரு நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்று பதிவேடுகள் காட்டுகின்றன. தடுப்பு முகாம்கள் அல்லது சிறைகளில் அவர்களது பெற்றோர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ''மையப்படுத்தப்பட்ட கவனிப்பு'' தேவைப்படுகிறதா என்பதைக் கண்டறிய, முறைப்படியான கணக்கெடுப்புகள் நடத்தப் படுகின்றன.

ஜின்ஜியாங்கில் பெரியவர்களின் அடையாளத்தை மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுவதுடன், குழந்தைகளை அவர்களுடைய அடிப்படை வேர்களில் இருந்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜின்ஜியாங்கில் சீனாவின் தீவிர கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருப்பதால் சாட்சியங்களைத் திரட்டுவது சிரமமான விஷயமாக இருக்கிறது. வெளிநாட்டு செய்தியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறார்கள். ஆனால் சாட்சியங்கள் துருக்கியில் கிடைக்கின்றன.

இஸ்தான்புல் நகரில் டஜன் கணக்கிலானவர்கள் தங்களுடைய கதைகளைச் சொல்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பலரும் தங்களுடைய குழந்தைகளின் புகைப்படங்களை கையில் வைத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் தங்கள் தாயகமான ஜின்ஜியாங்கில் காணாமல் போயிருப்பதாகக் கூறுகிறார்கள்.

''அவர்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது'' என்று ஒரு தாயார் சொல்கிறார். தன்னுடைய மூன்று மகள்களின் புகைப்படத்தைக் காட்டிய அவர், ''குழந்தைகளுடன் எங்களுக்குத் தொடர்பே இல்லை'' என்று கூறினார்.

மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோரின் புகைப்படத்தை வைத்திருக்கும் இன்னொரு தாய், ''குழந்தைகளை அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்'' என்று கண்ணீரை துடைத்தபடி கூறுகிறார்.

அடுத்தடுத்து உணர்ச்சிபூர்வமான, சோகம் தோய்ந்த சாட்சியங்களாக 60 தனித்தனி நேர்காணல்களில், ஜின்ஜியாங்கில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர்களும் அவர்களுடைய உறவினர்களும் தகவல்களை அளித்தனர்.
 

அவர்கள் அனைவரும் ஜின்ஜியாங்கில் பெரும்பான்மை முஸ்லிம் இனத்தவராக உள்ள வீகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மொழி மற்றும் நம்பிக்கை அடிப்படையில் துருக்கியுடன் அவர்களுக்கு நீண்டகாலமாக உறவு இருக்கிறது. படிப்பதற்கு அல்லது வியாபாரம் செய்வதற்கு, குடும்பத்தைப் பார்க்க அல்லது சீனாவின் கருத்தடை கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க, அதிகரிக்கும் மத அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானவர்கள் துருக்கி வந்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, நூறாயிரக் கணக்கிலான வீகர் இனத்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை பிரமாண்டமான முகாம்களில் சீனா அடைத்து வைக்கத் தொடங்கிய பிறகு, அவர்கள் பொறியில் அகப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
 

மத தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, வீகர் மக்களுக்கு ``தொழிற்பயிற்சி மையங்களில்'' கல்வி அளிக்கப் படுகிறது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பலரும் தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக, வழிபாடு செய்ததற்காக, புர்கா அணிந்ததற்காக, அல்லது துருக்கி போன்ற வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்த வீகர் மக்களைப் பொருத்தவரை, திரும்பிச் செல்வது என்பது, நிச்சயமாக அடைக்கப்படுவதற்கான முடிவுதான். தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன - ஜின்ஜியாங்கில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசுவதுகூட மிகவும் ஆபத்தானதாகிவிட்டது.

அங்கு தனது மனைவியை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ள நிலையில், தங்களின் எட்டு குழந்தைகளும் இப்போது சீன அரசின் கவனிப்பில் இருப்பார்கள் என்று பயப்படுகிறார் ஒரு தந்தை.

''அவர்களை குழந்தைகள் கல்வி முகாம்களுக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்'' என்று அவர் கூறினார்.
 

பிபிசி நடத்திய புதிய ஆய்வின் மூலம், இந்தக் குழந்தைகளுக்கும், மேலும் பல ஆயிரம் பேருக்கும் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜின்ஜியாங்கில் வயது வந்த முஸ்லிம்கள் சீனாவின் பெருமளவிலான பாதுகாப்பு முகாம்களில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை முழுமையாக வெளிப்படுத்தியதற்காக பாராட்டு பெற்றவர் ஜெர்மன் ஆராய்ச்சியாளர் டாக்டர் அட்ரியன் ஜென்ஸ்.

பொதுவெளியில் கிடைக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில், அவர் தயாரித்துள்ள அறிக்கை, ஜின்ஜியாங்கில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிக்கூட விரிவாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

பள்ளிக்கூட வளாகங்கள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. புதிய உறைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தங்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பாதுகாப்பு முகாம்களை உருவாக்கி வரும் அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை முழு நேரமும் கவனித்துக் கொள்வதற்கான வசதிகளை அரசு உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே இனவாத மக்களை குறிவைத்தே இவை நடப்பதாகத் தோன்றுகிறது.
 

2017ல் ஓர் ஆண்டில் மட்டும், ஜின்ஜியாங்கில் மழலையர் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீகர் மற்றும் பிற சிறுபான்மை இன குழந்தைகள் என்று, அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பள்ளிக்கூடத்துக்கு முந்தைய கல்விக்கு சேருபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட ஜின்ஜியாங்கில் குறைவாக இருந்த நிலை மாறி, இப்போது சீனாவிலேயே அதிகபட்ச அளவாக உயர்ந்திருக்கிறது.

வீகர் இன மக்கள் அதிகமாக வாழும் தெற்கு ஜின்ஜியாங்கில் மட்டும், மழலையர் பள்ளிகள் கட்டுவது மற்றும் மேம்படுத்துவதற்கு 1.2 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் பட்டுள்ளது.

அதிக அளவில் பொதுவான உறைவிட வசதியை அதிகரிப்பதும் இந்த, கட்டுமான வளர்ச்சியில் அடங்கும் என்று ஜென்ஸ்-ன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

பெருமளவில் பெரியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்கள் செயல்படும் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜின்ஜியாங்கின் கல்வி விரிவாக்கப் பணிகளும் நடைபெறுவதாகத் தோன்றுகிறது.

இது தெளிவாக, ஏறத்தாழ அனைத்து வீகர் மற்றும் இதர சிறுபான்மை குழந்தைகளைப் பாதிக்கிறது. அவர்களின் பெற்றோர்கள் முகாம்களில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பாதிப்பு உள்ளது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கவுண்ட்டி அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 2,000 குழந்தைகளை யெச்செங் கவுண்ட்டி நம்பர் 4 என்ற வேறொரு பெரிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றினர்.

ஜின்ஜியாங்கின் தெற்குப் பகுதியில் உள்ள யெச்செங் நகரில் (வீகரில் கர்கிலிக் நகரில்) உறைவிட வசதியுடன் இரண்டு புதிய பிரமாண்டமான பள்ளிகள் கட்டப்படும் காட்சிகளை மேலே உள்ள படம் காட்டுகிறது.

கட்டுமானப் பணியின் வேகம் அதிகமானதாக இருக்கிறது. பொதுவான விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு நடுநிலைப் பள்ளிகள், தேசத்தில் உள்ள சராசரி அளவைவிட மூன்று மடங்கு பெரியவையாக, ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

''சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பராமரிப்பதற்கு'' உதவும் வகையில், உறைவிடப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கப் படுவதாக அரசு பெருமையுடன் கூறிக் கொள்கிறது. ''பெற்றோர்களின் பங்கை பள்ளிக்கூடங்கள் ஆற்றுகின்றன'' என்று அரசு கூறுகிறது. இதில் ஆழமான விஷயம் இருப்பதாக ஜென்ஸ் கூறுகிறார்.

''சிறுபான்மை சமூகத்தவர்களின் கலாச்சாரத்தை மாற்றியமைக்க தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெறும் இடமாக உறைவிடப் பள்ளிகள் உள்ளன'' என்று அவர் தெரிவிக்கிறார்.

பள்ளிக்கூட வளாகங்களில் உய்குர் மற்றும் பிற உள்ளூர் மொழிகளை நீக்கிவிட்டு, மற்ற மொழிகள் மீது தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்படுகிறது என்று அவருடைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது சீன மொழி தவிர, வேறு எந்த மொழியில் பேசினாலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடுமையான மற்றும் புள்ளிகள் அடிப்படையிலான தண்டனைகளை விதிக்கும் வகையில் தனிப்பட்ட பள்ளிக்கூட விதிமுறைகள் உள்ளன.
 

ஜின்ஜியாங்கில் அனைத்துப் பள்ளிகளிலும் சீனமொழி கற்பிக்கப்படும் நிலையை எட்டிவிட்டதாக ஏற்கெனவே அரசு கூறியுள்ள நிலையில், அந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளுடன் இது ஒத்துப்போகிறது.

ஜின்ஜியாங்கின் பிரசார இலாகா மூத்த அதிகாரி ஸ்சூ கய்க்சியாங் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இதை மறுக்கிறார். பெற்றோர்கள் இல்லாத நிலையில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்கிறது என்பதை மறுக்கிறார்.

''குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு அனுப்பப் பட்டிருந்தால், அந்தக் குடும்பங்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டிருக்கும்,'' என்று சிரித்துக் கொண்டே அவர் கூறுகிறார். ``அப்படிப்பட்ட நேர்வுகளை நான் ஒருபோதும் பார்க்கவில்லை'' என்கிறார்.

ஆனால், அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையில், உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதைக்க காட்டுவதற்கான ஆதாரங்களை ஜென்ஸ் திரட்டியுள்ளார்.

தொழிற் பயிற்சியில் அல்லது சிறையில் உள்ள பெற்றோரின் குழந்தைகள் பற்றியும், அவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட கவனிப்பு தேவையா என்பது குறித்தும் உள்ளூர் அதிகாரிகள் நடத்தும் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் விரிவான படிவங்கள் உள்ளன.

''தேவையுள்ள குழுக்களுக்கு'' அளிக்கப்படும் பல்வேறு மானியங்களை விவரிக்கும் அரசு ஆவணம் ஒன்று ஜென்ஸ்-க்கு கிடைத்துள்ளது. '' கணவன், மனைவி இருவருமே தொழிற் பயிற்சியில் உள்ள'' குடும்பங்களும் இதில் அடங்கும். மேலும் பெற்றோர்களுடன் முகாம்களில் உள்ள குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்வது அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு கஷ்கர் நகர நிர்வாகம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
 

அந்தப் பள்ளிக்கூடங்களில் `'மன நல ஆலோசனைகள் பலப்படுத்தப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ``மாணவர்களின் சிந்தனை கல்வியை பலப்படுத்த வேண்டும்'' என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. பெற்றோர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பயன்படுத்தப்படும் வாசகங்களை நினைவூட்டுபவையாக இந்த வார்த்தைகள் உள்ளன.

அதிக அளவில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது முக்கியமான சமூகப் பிரச்சனையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுபற்றி வெளியில் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்தாலும், இதைக் கையாள சில முயற்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய சில அரசு ஆவணங்கள், இணையதளத்தில் தேடுபொறிகளில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளதைப் போலத் தெரிகிறது. "தொழிற் பயிற்சி'' என்ற வார்த்தைகள் உள்ள இடத்தில் தெளிவில்லாத குறியீடுகளை வைத்து மறைத்திருக்கிறார்கள். அதைச் சொல்லிவிட்ட நிலையில், பெரியவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சில முகாம்களின் அருகில் மழலையர் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. சீன அரசு ஊடக செய்தியாளர்கள் இது நியாயமான செயல்பாடுகள் என புகழ்ந்திருக்கிறார்கள்.

சிறுபான்மை இன குழந்தைகள் "நல்ல வாழ்வியல் பழக்கங்களை'' கற்றுக் கொள்ள, உறைவிடப் பள்ளிகள் உதவுகின்றன என்றும், வீடுகளில் இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை அங்கே கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். சில குழந்தைகள் தங்களுடைய ஆசிரியைகளை "மம்மி'' என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற நேர்வுகளில் அதிகாரப்பூர்வ கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக, ஜின்ஜியாங்கில் உள்ள கல்வி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம். பலரும் எங்களுடன் பேச மறுத்துவிட்டனர். சிலர் மட்டும், உள்ளே என்ன நடக்கிறது என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.

முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு என்னவாகும் என்று ஓர் அதிகாரியிடம் நாங்கள் கேட்டோம்.

"அவர்கள் உறைவிடப் பள்ளிகளில் இருக்கிறார்கள்'' என்று அந்தப் பெண் அதிகாரி பதில் அளித்தார். ``நாங்கள் தங்குவதற்கு இடம் தருகிறோம். உணவும் துணிகளும் தருகிறோம். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் எங்களிடம் கூறியிருக்கிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.
 

இஸ்தான்புல் நகரில் மனம் உடைந்த குடும்பத்தினரின் கதைகள் வெளி வந்தன. அதிருப்தியும், ஆழமான எதிர்ப்பும் தெரிந்தன.

''ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப் பட்டுள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக சாட்சியங்கள் அளித்து வருகிறோம்'' என்று ஒரு தாயார் என்னிடம் கூறினார். ''எங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்த பிறகும் உலக நாடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஜின்ஜியாங்கில், ''கடுமையாக தனிமைபடுத்தப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் உள்ள'' பள்ளிக்கூடங்களில் அனைத்துக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பல பள்ளிக்கூடங்களில், கண்காணிப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. 10,000 வோல்ட் மின்சார வேலிகள், வெளி எல்லை அலார வசதி ஆகியவையும் அங்கு உள்ளன. முகாம்களையே மிஞ்சும் அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சில பள்ளிகளில் உள்ளன.

அடைத்து வைக்கும் நிகழ்வுகள் தீவிரமடைந்த காலத்தில், 2017-ன் தொடக்கத்தில் இதற்கான கொள்கை வெளியிடப்பட்டது. வீகர் பெற்றோர்கள், பலத்தை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை மீட்டுவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசு இதுபோல செயல்படுகிறதா என்று ஜென்ஸ் ஐயம் தெரிவித்துள்ளார்.

``திட்டமிட்டு பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து வைப்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தால், அடிப்படை வேர்களில் இருந்து விலகிய, மத நம்பிக்கைகள் மற்றும் சொந்த மொழியில் இருந்து விலகிய புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஜின்ஜியாங்க அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதைக் காட்டுவதாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்'' என்று அவர் என்னிடம் கூறினார்.

''ஆதாரங்களைப் பார்த்தால் கலாசாரப் படுகொலை என்றுதான் இதை நாம் கூற வேண்டும் என்று நான் நம்புகிறேன்'' என்றார் அவர்.