1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (15:10 IST)

அர்னாப் : இடைக்கால மனு தள்ளுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

2018-ம் ஆண்டு அன்வே நாயக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை நேற்று (9 நவம்பர் 2020, திங்கட்கிழமை) மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்னாப், ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தியது. அப்படி தாக்கல் செய்யப்படும் மனு மீது நான்கு நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
 
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 7ஆம் தேதி தன்னை கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது தனது மாமனார், மாமியார், மனைவி ஆகியோரை காவல்துறையினர் உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினரும் தங்களின் பணிக்கு இடையூறை விளைவித்ததாக அர்னாப் மீது தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
 
தற்போது அர்னாப் கைதாகியுள்ள அன்வே நாயக் தற்கொலை வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை காவல்துறையினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அன்வே நாயக்கின் மனைவி, தனது கணவரின் மரணம் தொடர்பாக விசாரிக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் கேட்டுக் கொண்டார். 
 
இது தொடர்பாக அன்வே நாயக்கின் மகள் அளித்த புதிய புகார் மனு அடிப்படையில் அந்த வழக்கை மறுவிசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியின் பெயரை அன்வே நாயக் கடிதம் எழுதியது தொடர்பாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.