புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (17:13 IST)

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
 
மேலும் நான்கு நாட்களில் அர்னாப், அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தை நாடாமல் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
 
எந்த வழக்கின் கீழ் அர்னாப் கைது செய்யப்பட்டார்?
கான்கார்ட் டிசைன் என்கிற நிறுவனத்துக்கு, மும்பையில் இருக்கும் ரிபப்ளிக் டீவி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஸ்டூடியோக்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்த கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தான் அன்வே நாயக். கடந்த மே 2018-ல், அன்வே நாயக் மற்றும் அவரது தாயார், ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் அலிபாக் வீட்டில், இறந்து கிடந்தார்கள்.
 
அன்வே நாயக் இறந்த போது, அவர் வீட்டில், ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள், இதை ஒரு தற்கொலை வழக்காக பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில், இந்த தற்கொலை குறிப்பு நிரூபிக்கப்படவில்லை.
 
தன் கணவர் அன்வே நாயக்குக்கு, அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதிஷ் சர்தா ஆகியோர், கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என அன்வே நாயக்கின் மனைவி அக்‌ஷதா தெரிவித்தார்.
 
அன்வே நாயக்குக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில், 90 சதவிகித பணத்தைச் செலுத்திவிட்டதாகவும், பாக்கி வேலைகளைச் செய்யாததால், மீதமுள்ள 10 சதவிகித பணத்தைக் கொடுக்கவில்லை எனவும் அர்னாப் கோஸ்வாமியின் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா பிரைவேட் லிமிடெட் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
 
காவல் துறை, கடந்த ஏப்ரல் 2019-ல், அர்னாபுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என, இந்த வழக்கை மூடக் கோரி அறிக்கை தாக்கல் செய்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் அன்வே நாயக் மனைவியின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
 
மாநிலத்தின் உள்துறை அமைச்சர் சிஐடி விசாரணைக்கு உத்தரவு விட்டிருந்தார். மீண்டும் ராய்காட் மாவட்ட காவல் துறை, தன் விசாரணையைத் துவங்கியது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாகத் தான், ராய்காட் காவல் துறை, மும்பைக்கு வந்து அர்னாப் கோஸ்வாமியை, அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் குற்றம்சாட்டி கைது செய்தார்கள். பின் அர்னாப் கோஸ்வாமியை நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது.