தமிழகத்தில் இன்று அமலுக்கு வரும் பொது முடக்க தளர்வுகள் என்னென்ன?
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 7 ஆம் கட்டமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் அவ்வப்போது பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (ஆகஸ்டு 10) முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய்கள் உள்ளோரை அனுமதிக்க வேண்டாம். உடற்பயிற்சி மேற்கொள்வோர் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொது முடக்க கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.10 ஆயிரம் வரை ஆண்டு வருவாய் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் இன்று முதல் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதற்கு சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.