வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:39 IST)

தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெயர் மாயம்?? – தமிழக அரசு விளக்கம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சில மாணவர்களின் பெயர்கள் அதில் இல்லாமல் போனது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் 100% அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9,45,006 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்ச்சி முடிவுகள் 9,39,829 பேருக்கு மட்டுமே வந்துள்ளதும், மீதமுள்ள 5,177பேரின் தேர்ச்சி குறித்த தகவல்கள் இல்லாததாலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்த மாணவர்கள் எண்ணிக்கை 9,45,077. இதில் 231 மாணவர்கள் பதிவு செய்தபின் இயற்கை எய்தியுள்ளனர். 658 பேர் மாற்றுச்சான்றிதழ் பெற்று படிப்பை நிறுத்தியுள்ளனர். 4,359 பேர் பள்ளிகளில் நடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடங்களை கூட எழுதவில்லை. இந்த காரணங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 5,248 பேரை தவிர்த்து 9,39,829 பேருக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.