சீனாவில் 6 மாதத்துக்கு பின் மீண்டும் கொரோனா மரணங்கள்: பெய்ஜிங்கில் ஊரடங்கு
சீனாவில் ஆறு மாத காலத்துக்கு பிறகு மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 5,229 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங் நகரத்தின் சில பகுதிகள் மீண்டும் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. சீனாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பது மிகவும் அரிது. ஆனால் 'ஜீரோ-கோவிட்' கொள்கையை அரசு கடைபிடிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து அங்கு சில போராட்டங்கள் நடந்தன. 'ஜீரோ-கோவிட்' கொள்கையை அமல்படுத்துவதற்காக, பல லட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதுடன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசால் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பெய்ஜிங்கின் ஹைடியான் மற்றும் சோயாங் ஆகிய பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன.
நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன?
12 நவம்பர் 2022
கருப்பு மரணத்துக்கு காரணமான நோய் இப்போதும் பாதிப்பது எப்படி?
21 அக்டோபர் 2022
மீன்கள், நண்டுகளுக்கு சீனாவில் கொரோனா பரிசோதனை: காரணம் என்ன?
20 ஆகஸ்ட் 2022
இதுபோல பெய்ஜிங் நகரத்திற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள் அவர்கள் வந்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனுமதிக்கும் வரை அவர்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெய்ஜிங் மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் வசிக்கும் சீனாவின் பிற பகுதிகளிலும் அதிகாரிகளால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் 24,730 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போது பதிவான தினசரி எண்ணிக்கை ஆகும்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் மட்டும் பெய்ஜிங் மாநகரில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 316 ஆக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் உயிரிழந்த மூவரில் ஒருவர் 87 வயதான முதியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாநகரத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இணை இயக்குநர் லியு ஷியோஃபெங் இப்போது இருக்கும் சூழ்நிலை மிகவும் சிக்கலானது என்று தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. தாங்கள் 'ஜீரோ-கோவிட்' கொள்கையை கடைப்பிடித்ததால்தான் பிற நாடுகளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை விட சீனாவில் மிகவும் குறைவானவர்கள் கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்கள் என்று சீன அரசு கூறுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் அல்லது தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு அவசரகால மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சென்ற வாரம் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்காமல் சீனாவின் ஜெங்ஜோ நகரில் நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஊரடங்கு காரணமாக அந்த குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சேவைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. முன்னதாக, சீனாவின் மேற்கு பகுதியில் இருக்கும் லான்ஜோ நகரில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தமது மூன்று வயதே ஆகியிருந்த மகனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்றும் அதனால் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயு கசிவு ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமது மகன் மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்ததாகவும் ஒரு தந்தை தெரிவித்திருந்தார். இதனால் மாதத் தொடக்கத்தில் லான்ஜோ நகரில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அக்டோபர் மாத இறுதியில் ஹெனான் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி ஒருவரும் உயிர் இழந்ததாக செய்திகள் வெளியாகின. மருத்துவ உதவிகள் அந்தச் சிறுமிக்குக் கிடைக்கவே இல்லையென்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.