சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் அளித்த நகை திருட்டு புகாரின் அடிப்படையில், அக்கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞரை, திருபுவனம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த லாக்-அப் டெத் சம்பவத்தை தொடர்ந்து, தொடர்புடைய 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, "இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட அவரை ஏன் கடுமையாக தாக்கினார்கள்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அஜித் குமாரின் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, வழக்கில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்றும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran