திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:09 IST)

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு அஞ்சி பதுங்கியிருக்கும் பிரிட்டன் ஆசிரியர்கள்

தாலிபன்களுக்கு அஞ்சி ஆப்கனில் பதுங்கி இருப்பதாக பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்த ஆசிரியர்கள் பிபிசியிடம் கூறினர்.
 
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் பண்பாட்டைப் பரப்புவதற்கும் ஆங்கிலம் கற்பிப்பதற்கும் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். "பழிவாங்கல்களுக்கு பயந்து" மறைந்து வாழ்வதாக அவர்கள் தெரிவித்தனர். சுமார் 100 முன்னாள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊழியர்கள் இதுவரை பிரிட்டனுக்கு வருவதற்கான உரிமை மறுக்கப்பட்டு ஆப்கானிஸ்தானிலேயே தங்கி இருக்கின்றனர்.
 
"சிறையில் இருப்பது போல் நாங்கள் அனைவரும் உள்ளே அமர்ந்திருக்கிறோம்" என்று அவர்களில் ஒருவர் கூறினார். மற்றொருவர் பணம் காலியாகிவிட்டதாகத் தெரிவித்தார். புதிய திட்டம் ஒன்றின் மூலம் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து பலரும் தலைமறைவாகவே இருக்கின்றனர்.
 
கலாசார மற்றும் கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரிட்டிஷ் கவுன்சில் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அதன் ஆசிரியர்கள் இப்போது எதிர்கொள்ளும் ஆபத்து "தெளிவாக உள்ளது" என்று கூறுகிறது.
 
"நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், எங்கள் முன்னாள் சகாக்கள் அவநம்பிக்கையான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்" என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஸ்காட் மெக்டொனால்ட் கூறினார். அவர் ஆசிரியர்களை "ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் முகம்" என்று கூறுகிறார்.
 
2014 வரை பிரிட்டிஷ் துருப்புக்கள் தங்கியிருந்த ஹெல்மண்டில் "அபாயகரமான, ஆபத்தான" சூழ்நிலைகளில் பிரிட்டிஷ் கவுன்சிலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் 20 வயதான "ரஹிமல்லா" (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
 
அவரது பணிகளில் ஒன்று பள்ளி ஆசிரியர்களுக்கு "சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மை பற்றி" கற்பிப்பது. இது பெரும்பாலும் உள்ளூரில் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. பல நன்கு படித்த ஆண் ஆசிரியர்கள் கூட பாலின சமத்துவம் என்ற கருத்தை ஏற்பதில்லை என்கிறார் ரஹிமல்லா.
 
"லெஸ்பியன்கள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் ஈர்ப்பு கொண்டோரை ஆப்கானிஸ்தான் சமூகங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொன்னோம், ஆனால் அவர்கள் அதை நிராகரித்தனர். நான் இஸ்லாமிய விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு வேலையைச் செய்கிறேன் என்று சொன்னார்கள்."
 
அவர் தலைமறைவாக இருக்கிறார். பணிபுரியவோ குடும்பத்தைப் பார்க்கவோ முடியவில்லை. தாலிபன்கள் அவரைக் கண்டுபிடித்தால் கொன்றுவிடுவார்கள் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
 
"எனது உறவினர் ஒருவர் தலிபான்களால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அடுத்த நாளே, தலிபான் உளவுத்துறையினர் அவரைக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து கொன்றுவிட்டனர். பின்னர் அவரது உடலை ஹெல்மண்ட் ஆற்றில் வீசினர். ஒரு பேஸ்புக் பதிவுக்காக" என்றார். "அவர்கள் என்னையும் அவ்வாறே செய்வார்கள் என்று அஞ்சுகிறேன்"
 
"நாங்கள் உண்மையிலேயே மனச்சோர்வடைந்துள்ளோம்" என்கிறார் முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவர். அவருக்கு ஒரு இளம் மகள் இருக்கிறாள். வெளியில் போக அனுமதிக்கும்படி கெஞ்சுவதாக அவர் கூறுகிறார்.
 
"நாங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறோம். வெளியே செல்ல முடியாது, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். "தாலிபன்கள் தேடி வருவது பற்றிக் கேள்விப்பட்டதும் வேறு இடத்தை நோக்கி நகர்கிறோம்"
 
மற்றொரு ஆசிரியர் மாறுவேடத்தில் சில வாரங்களுக்கு ஒருமுறை வீட்டை விட்டு வெளியே செல்வதாகக் கூறினார். அவர்களின் நிலைமை குறித்து பேசிய பிரிட்டிஷ் கவுன்சில் முன்னாள் ஜோ சீட்டன், தம்மை அணுகி அவர்கள் உதவிக்காக கெஞ்சத் தொடங்கியதாகக் கூறுகிறார்.
 
இது குறித்து அவர் பிரிட்டிஷ் கவுன்சிலை விமர்சித்துள்ளார். ஆசிரியர்களை விட்டுவிட்டு ஊழியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். பழிவாங்கப்படும் ஆபத்தில் உள்ள ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ARAP என்ற அரசாங்கத் திட்டத்தின் கீழ் அவர்கள் பிரிட்டனுக்கு வரத் தகுதியுடையவர்கள் என்று அவர் கூறுகிறார்.
 
அவர்களின் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலிக்க பிரிட்டிஷ் கவுன்சில் பிரிட்டன் அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் பல மாதங்கள் மறைந்து வாழும் ஆசிரியர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. "இப்படியே நீண்ட காலம் வாழ முடியும் என்று தோன்றவில்லை" என்கிறார் ரஹிமல்லா.