செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (10:54 IST)

3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள் - ஏன்?

சோதனையின்போது தாங்கள் கைப்பற்றிய 3,000 லிட்டர் மதுபானத்தை ஆப்கன் உளவுத்துறை முகவர்கள் காபூலில் உள்ள ஒரு கால்வாயில் கொட்டியதாக, ஏ.எப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
தாலிபன் ஆட்சியில் மதுபான விற்பனையை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பின்னர், பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,000 லிட்டர் மதுபானங்களை கால்வாயில் கொட்டியதாக, அந்நாட்டின் உளவுத்துறை பொது இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, உளவுத்துறை பொது இயக்குநரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அதன் முகவர்கள், தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கால்வாயில் கொட்டுவதைக் காண முடிகிறது.
 
"மதுபான உற்பத்தி மற்றும் அதனை விற்பனை செய்வதில் இருந்து முஸ்லிம்கள் தீவிரமாக ஒதுங்கி இருக்க வேண்டும்," என, அந்த வீடியோவில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த சோதனை எப்போது நடத்தப்பட்டது, எப்போது மதுபானங்கள் கால்வாயில் ஊற்றி அழிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக மூன்று வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் மதுபான விற்பனை மற்றும் அதனை உட்கொள்ளுதல் இரண்டும் முந்தைய ஆட்சியிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடத்திவரும் தாலிபன்கள் மது விற்பனையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
 
தாலிபன்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆப்கனை கைப்பற்றியதிலிருந்து, நாடு முழுவதும் மது விற்பனை, போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது உள்ளிட்ட சோதனைகள் அதிகமாகியுள்ளன.
 
தாலிபன் அரசின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம், பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.