1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:22 IST)

ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் தாலிபன்கள் - என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட முள்வேலிகள் வேரோடு பிடுங்கப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.
 
இந்த எல்லையை தாங்கள் ஏற்கவில்லை என்று இந்த வீடியோக்களுக்குப் பிறகு வெளியான ஆப்கன் தாலிபன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை பாகிஸ்தான் அரசு தரப்பில் இது குறித்து முழு அமைதி நிலவியது. ஆனால் திங்களன்று வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியின் அறிக்கை வெளிவந்தது.
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி செய்தியாளர் சந்திப்பின் போது, 'பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் தாலிபன்கள் முள்வேலிகளை பிடுங்கியுள்ள விவகாரத்தில் பாகிஸ்தான் அமைதியாக இல்லை," என்று குறிப்பிட்டார்.
 
"நாங்கள் வேலியை போட்டுள்ளோம் இன்ஷா அல்லாஹ் எங்கள் முயற்சி தொடரும்," என்கிறார் அவர். மேலும், "ஆப்கானிஸ்தான் எங்களது தோழமை நாடு மற்றும் அண்டை நாடு. அந்த நாட்டுடன் எங்களுக்கு உறவுகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ், எந்த பிரச்னைகள் இருந்தாலும் ராஜீய வழிகளில் நாங்கள் அதைத்தீர்த்துக் கொள்வோம்," என்று அவர் தெரிவித்தார்.
 
"சிலர் இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வது பாகிஸ்தானின் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் எங்கள் நலன்களைப் பாதுகாப்போம்," என்று ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார்.
 
இதுவரை பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில் இரண்டு வீடியோக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் பாகிஸ்தானின் மஹ்மந்த் மாவட்டத்தை ஒட்டிய பாக்-ஆப்கான் எல்லையில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் பாக்-ஆப்கான் எல்லைக்கு அருகில் ஒரு வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், லாரி மூலம் முள்வேலிகள் பிடுங்கப்படும் ஒரு வீடியோவும் வெளியானது. இந்த வீடியோ இரவில் எடுக்கப்பட்டது.
 
இதே போன்ற பல பகுதிகளின் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் முள்கம்பிகளின் சுருள்களை பார்க்கமுடிகிறது. ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து இரண்டு முறை வேலிகள் நீக்கப்பட்டதாக பாகிஸ்தானின் மஹ்மந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
 
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தாலிபன் எதிரணி பகுதியிலும், பெலோசி பகுதியிலும் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு ஒரு அரசு பள்ளியையும் பார்க்க முடிகிறது.
 
ஆப்கானிஸ்தானில் பகிரப்படும் வீடியோவில், ஆப்கான் தாலிபன்கள் பேசுகிறார்கள்.
 
இது வடக்கு பெலோசி பகுதி என்றும் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இங்கு அரசு தொடக்கப்பள்ளி 'பெலோசி மஹ்மந்த்' கட்டப்பட்டுள்ளது என்றும் இது ஆப்கானிஸ்தான். பகுதி என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
 
இதேபோல், தாலிபன் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் வீடியோவை, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பாரசீக மொழியில் பாக்-ஆப்கான் எல்லையில் உள்ள முள்வேலி பற்றி கூறுகிறார்.
 
முள்வேலிகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது என்றும், இந்த வேலி உலகளாவிய மற்றும் பிராந்திய கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 
இது தவிர, ஆப்கானிஸ்தானில் உள்ள தகவல் அமைச்சகத்தின் அதிகாரி பிலால் கரிமியை தொடர்பு கொண்டபோது, எல்லையில் சில சிறிய சம்பவங்கள் நடந்துள்ள போதிலும், இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று கூறினார். ஆப்கானிஸ்தானின் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்தப்படக் கூடாது என்பது ஆப்கானிஸ்தானின் முயற்சியாகும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
 
ஷா மெஹ்மூத் குரேஷியின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாகவே பாகிஸ்தானில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் பிபிசி இதுபற்றிய கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
 
எப்போதிலிருந்து இந்த சம்பவங்கள் நடக்கின்றன?
 
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் பணி 2-3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வெளியான வீடியோவில் ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளும் காணப்பட்டனர்.
 
ட்விட்டரில் உள்ள முதல் வீடியோ மற்றும் புகைப்படத்தில், சில ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் பணியாளர்கள் முள்வேலிகளை அகற்றுவதை பார்க்கமுடிகிறது. கூடவே ஏராளமான முள்வேலிகள் தரையில் கிடப்பதையும் காணலாம். முள்கம்பிகளை கொண்டுவா என்று ஒருவர் சொல்ல, எல்லா கம்பிகளையும் எடுத்துவந்துவிட்டேன் என்று மற்றொருவர் கூறுவதை கேட்க முடிகிறது.
 
தாலிபன் புலனாய்வுத் தலைவர் டாக்டர் பஷீர் தலைமையில் இந்த சிறப்புப் படைகள் செயல்படுவதாக ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் பிலால் சர்வரி தனது ட்வீட்டில் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இந்த முள்வேலிகள் போடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் படைகள் கூறியதாக இந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் பிற குற்றவாளிகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, எல்லையில் முள்வேலிகளை அமைக்க நான்காண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் முடிவு செய்தது.
 
பெரும்பாலான தாக்குதல்தாரிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து இங்கு தாக்குதல்களை நடத்திய பிறகு தப்பிச் செல்வதாக, பாகிஸ்தானில் ஆர்மி பப்ளிக் ஸ்கூல் மீதான தாக்குதல் மற்றும் பிற பயங்கரவாத சம்பவங்களுக்குப் பிறகு நிர்வாகம் தெரிவித்தது. இதேபோல், மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களில் குற்றவாளிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுகின்றனர். அவர்கள் அங்கிருந்தபடி இந்த நடவடிக்கைகளை செய்கிறார்கள்.
 
ஆப்கன் பாகிஸ்தான் இடையிலான நெடுந்தூர எல்லை
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை சுமார் 2640 கி.மீ நீளமானது.
பட மூலாதாரம்,BANARAS KHAN
படக்குறிப்பு,
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை சுமார் 2640 கி.மீ நீளமானது.
 
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை மிகவும் இடர்கள் கொண்டது மற்றும் நீண்டது. இதை தொடர்ந்து கண்காணிப்பது கடினமான பணி. எனவே எல்லையில் வேலி அமைத்தால் மக்கள் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை சுமார் 2,640 கி.மீ நீளம் கொண்டது. அது தொலைதூர மலைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த முள்வேலிகளுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், எல்லையை கண்காணிக்க நூற்றுக்கணக்கான சிறிய கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சாவடிகள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேடார் அமைப்பும் இதில் நிறுவப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் எல்லைகளை பாதுகாப்பாக வைப்பதாகும்.
 
இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாத வரை, இந்த எல்லையில் முள்வேலி அமைப்பது சரியல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
டுரண்ட் கோடு அல்லது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை தொடர்பான இந்தத்தகராறு முதல் முறையாக எழவில்லை. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தத்தமது வாதங்களை முன்வைக்கின்றன.
 
இந்த இடம் பிரிட்டன் ஆளுகையின்கீழ் இருந்தபோது 1893இல் ஒரு ஒப்பந்தத்திற்குப்பின்னர் இந்த எல்லை நிறுவப்பட்டது. இந்த எல்லை தொடர்பான ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர் அமீர் அப்துர் ரஹ்மான் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரி மோர்டிமர் டுரண்ட் இடையே எட்டப்பட்டது. அதில் ஒப்பந்தத்தின் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.