பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி: உடைந்த கூட்டணி - என்ன நடக்கிறது உத்தரபிரதேச அரசியலில்?

utterpradesh
Last Updated: வியாழன், 6 ஜூன் 2019 (21:38 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கைக்குலுக்கிய முதல் நாளே, அக்கூட்டணி நிலைத்து நிற்காது என்று தெரிந்திருந்தது.
நம்பிக்கையின்மை, சந்தேகம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது.
 
இந்த இருக்கட்சிகளுக்குமே மக்களைக் கவர போதிய நேரம் இருக்கவில்லை. மேலும் இரு பக்கத்தில் இருந்தும் வாக்குகளை எளிமையாக சேகரிக்க போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. மாயாவதி மற்றும் அகிலேஷ் இருவருமே அதிக நம்பிக்கையில் இருந்து விட்டனர்.
 
தன்னைப்பற்றியே அதிகம் பேசுபவர் என்று குறிப்பிடப்படும் மாயாவதி, தொங்கு பாராளுமன்றம் வரும் பட்சத்தில் தாம் பிரதமராகலாம் என்ற கனவைக் கொண்டிருந்தது முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
 
அடுத்த சட்டசபை தேர்தலில் அறுவடை செய்யலாம் என்றும், 2022ல் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகலாம் என்றும் நினைத்திருந்தார் அகிலேஷ் யாதவ்.
 
ஆனால், இது எதுவும் நடக்கவில்லை.
 
கூட்டணி நீடிக்குமா இல்லையா என்பது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தே இருக்கும் என்று பல தசாப்தங்களாக மாயாவதி செய்துவரும் அரசியலை கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இருக்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லை எனில் என்ன நடக்கும் என்பதும் அகிலேஷ் யாதவுக்கு முன்பே தெரிந்திருக்கும்.
 
2018ல் உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சட்டசபை தொகுதி மற்றும் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதையடுத்து இந்தக் கூட்டணி முடிவானது. உடனே ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் ஒன்று சேர மகாகட்பந்தன் கூட்டணி கூட்டணியாக உருப்பெற்றது..
 
நிர்வகிக்கும் திறன்
கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்திருந்ததாக மாயாவதி கூறினாலும், அகிலேஷின் தலைமை வகிக்கும் திறன்களை மட்டுமல்லாது, அவரது நிர்வகிக்கும் திறன்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார் மாயாவதி.
 
இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் - 35 ஆண்டுகளுக்கு முன்
பாஜகவின் தேர்தல் வெற்றியில் இந்திய முஸ்லிம்களின் பங்கு
"இதனை பிரிவு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று செவ்வாய்க்கிழமை அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாயாவதி தெரிவித்திருந்தார். "அகிலேஷ் அவருடைய கட்சிக்குள் அனைத்தையும் சரிசெய்துவிட்டார் என்று தெரிந்தால், மீண்டும் நாங்கள் அவருடன் கைக்கோர்ப்போம். ஆனால், அப்படியில்லை என்றால் நாங்கள் தனித்தனியாக வேலை பார்ப்பதே சரியானது. அதனால்தான் வரும் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
 
 
மேலும், அகிலேஷ் யாதவுடனான தனிப்பட்ட உறவுகள் தொடரும் என்பதையும் அவர் அழுத்தி சொல்லியிருந்தார்.
 
"எனினும், நான் மக்களவைத் தேர்தல் முடிவுகளை புறக்கணிக்க முடியாது. அகிலேஷால் அவரது கட்சியை சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதன் பிரதிபலிப்புதான் இது. அதனால்தான் இந்த முடிவெடுக்கத் தள்ளப்பட்டேன்" என்றும் மாயாவதி குறிப்பிட்டார்.
 
வியப்பும் இல்லை
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான இரு வாரங்களுக்கு முன்பாகவே, இவ்வாறான கருத்துகளை தெரிவித்தார் மாயாவதி. எனினும் இதில் எந்த வியப்பும் இல்லை. கூட்டணி கட்சிகளை இவ்வாறு கைவிடுவது மாயாவதிக்கு முதன்முறையல்ல. கடந்த 25 ஆண்டுகளில் மூன்று முறை பாஜகவையும் ஒருமுறை சமாஜ்வாதி கட்சியையும் இவ்வாறு கைவிட்டுள்ளார்.
 
எனவே மீண்டும் அதே முறையை அவர் பின்பற்ற முடிவு செய்துள்ளார். 10 தொகுதிகளில் வெற்றி பெற அகிலேஷின் கூட்டணி அவருக்கு உதவியது. எதிர்காலத்தில் எஸ்பி-யுடன் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்க ஒரு காரணம், நடைபெற உள்ள இடைத்தேர்தல். அத்தேர்தலில் எஸ்பி-யின் செயல்பாடு குறித்தும் மாயாவதிக்கு தெரிய வரும். இடைத்தேர்தலுக்கு பிறகுதான் இந்தக்கூட்டணி என்ன ஆகும் என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.
 


இதில் மேலும் படிக்கவும் :