புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (12:05 IST)

இந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப்

தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம்  என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா  விலகுவதாக அறிவித்தார்.
 
புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க நாடுகள்  நடவடிக்கை எடுக்க அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. அது அமெரிக்க தொழில் நலனுக்கு எதிரானது என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார்.
 
முந்தைய ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பலவும் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின் ரத்து  செய்யப்பட்டன.
 
கடந்த நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் வெளியேற்றிய கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களே பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக்  காரணம் என்று வளரும் நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறி வருகின்றன.