தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க. வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டுமென எதிர்க் கட்சிகள் கோரிவந்தன. இந்த நிலையில், இந்த நான்கு தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நான்கு தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
சூலூர் தொகுதியில் பொங்கலூர் ந. பழனிச்சாமியும் அரவக்குறிச்சி தொகுதியில் வி. செந்தில்பாலாஜியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் பி. சரவணனும் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் எம்.சி. சண்முகையாவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் ந. பழனிச்சாமி, 2006ஆம் ஆண்டில் அமைந்த தி.மு.க. அமைச்சரவையில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராகப் பதவிவகித்தவர். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வி. செந்தில்பாலாஜி, 2011ல் அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவிவகித்தவர்.
2016 நவம்பரில் நடந்த தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியைவிட சுமார் 23,600 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்த செந்தில்பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். இதற்குப் பிறகு அவர் தி.மு.கவில் இணைந்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பி. சரவணன், 2016ல் அ.தி.மு.கவின் ஏ.கே. போஸை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தபோது நடந்த இந்தத் தேர்தலில், அவருக்குத் தெரியாமல் ஏ.கே. போஸின் வேட்புமனுவில் அவரது கைரேகை பதிவுசெய்யப்பட்டது என வழக்குத் தொடர்ந்தார் சரவணன்.
இந்த வழக்கில், ஏ.கே. போஸ் வெற்றிபெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்குள் ஏ.கே. போஸ் மரணமடைந்துவிட்டார். இருந்தபோதும் சரவணனை வெற்றிபெற்றவராக அறிவிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து அந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடந்த சில நாட்களிலேயே இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்பதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டும் என்றும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.