1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (12:31 IST)

வசூலில் வரலாறு படைத்த அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்

சமீபத்தில் வெளியான "அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் மட்டும் 630 மில்லியன் டாலர்களை வசூல் செய்து உலகளவில் புதிய வரலாற்றை படைத்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.



இதுபோன்ற திரைப்படங்களுக்கு பெரிய சந்தையாக பார்க்கப்படும் சீனாவில் வெளியிடப்படாமலேயே இது அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் திரைப்பட மதிப்பீட்டு நிறுவனமான எக்ஸிபிட்டர் ரிலேசஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த தொகை உறுதிசெய்யப்படுமானால், கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி முதல் வாரயிறுதியில் 542 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து இதுவரை முதலிடத்தில் இருக்கும் ’தி பேட் ஆஃப் த பியூரியஸை’ இது பின்னுக்கு தள்ளும்.மேலும், இதுவரை அமெரிக்காவில் மட்டும் 250 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள இத்திரைப்படம், அந்நாட்டில் வெளியான வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

சகோதரர்களான இயக்குனர்கள் ஜோ மற்றும் அந்தோணி ரஸோவால் சுமார் 300 முதல் 400 மில்லியன் டாலர்கள் செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு சூப்பர் ஹீரோக்கள், கதைக்கள வில்லனான தனோசை எதிர்த்து சண்டையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்சன், பெனடிக்ட் கம்பெர்பாட்ச், சாட்விக் போஸ்மேன் மற்றும் கிறிஸ் ப்ராட் ஆகியோர் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் நடித்திருந்தனர்.



இந்த படத்தின் கடைசி பாகம் வரும் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்படுகிறது.

சூப்பர் ஹீரோக்களை அடிப்படையாக கொண்ட அயர்ன் மேன் திரைப்படம் வெளியான 10 வருடங்களுக்கு பிறகு அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் திரைப்படம் வெளிவந்துள்ளது.

அவெஞ்சர்ஸின் முதல் பாகம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அமெரிக்காவில் மட்டும் 207.4 மில்லியன் டாலர்களை வசூல் செய்து அதற்கு முந்தைய மார்வல் திரைப்படங்களின் சாதனையை முறியடித்தது.

அவெஞ்சர்ஸின் இரண்டாவது பாகமான ’ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ 191 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.