செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (20:17 IST)

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன குழந்தைகளை தேட தொழிற்சாலையில் தோண்டும் பணி...

சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பு மூன்று குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக அடிலெய்டு நகரில் ஒரு தொழிற்சாலை வளாகத்தை தோண்ட ஆஸ்திரேலிய காவல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் கடந்த 1966ஆம் ஆண்டு காணாமல் போன 'போமோண்ட்' குழந்தைகளின் மர்மம் அந்நாட்டில் அவிழ்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. ஜேன் போமோண்ட்(9), அர்னா போமோண்ட்(7), கிராண்ட் போமோண்ட்(4) ஆகிய அம்மூவரும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
 
அவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரால் ஹேரி பிலிப்ஸ் எனும் தொழிலதிபர், நார்த் பிலிம்ப்டான் புறநகர்ப் பகுதியில், முன்பொரு காலத்தில் சொந்தமாகக் கொண்டிருந்த அந்த வளாகத்தின் மண்ணின் தன்மையில் ஒருவித ஒழுங்கின்மை சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அந்த இடத்தில் தோண்டப்பட்டும் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது. அதே வளாகத்தின் வேறொரு பகுதி 2013இல் தோண்டப்பட்டது. அப்போதும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
அக்குழந்தைகளின் பெற்றோரான ஜிம் மற்றும் நான்சி போமோண்ட் ஆகியோருக்கு தங்களது விசாரணை எவ்விதமான மன உளைச்சலையும் உண்டாக்கும் நோக்குடன் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த வழக்கின் மர்மத்தை தீர்க்கக் கூடிய தகவல்களை அளிப்பவர்களுக்கு பத்து லட்சம் ஆஸ்திரேலிய டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று தெற்கு ஆஸ்திரேலிய மாகாண அரசு அறிவித்துள்ளது.