திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:37 IST)

அமேசான் காட்டுத்தீ: 2500 கிமீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை

அமேசான் தீ புகை சான் பௌலோ நகரில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

 
அமேசானில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று பிரேசிலிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்கு நிலத்தை பயன்படுத்துவதற்காக சில வேளைகளில் இந்த காட்டுத்தீக்கு மக்களே காரணமாகி விடுகின்றனர்.
 
தேசிய விண்வெளி ஆய்வு நிலையத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 72,800 தீ உருவாகிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டைவிட அதிகமாகும்.
தென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வானிலை அறிவிப்பில், சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது.
 
தென் துருவத்தில் நிலவிய குளிரான வானிலையும், அமேசான் மழைக்காடுகளில் உருவான காட்டு தீயால் எழுந்த புகையும் சேர்ந்து இத்தகைய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சான் பௌலோ நகரின் வடக்கே 2,500 கிலோமீட்டர் தொலைவில் தீ ஏற்பட்டதால் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் இந்த நகரில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
சான் பௌலோவுக்கு கனமான மேகங்களை தாழ்வாக கொண்டு வந்த குளிர் காலநிலையோடு இந்த புகையும் கலந்துவிட்டது. மேல் நோக்கி செல்வதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் கீழேயே புகை சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் தங்கிவிடுகிறது என்று வானியல் ஆய்வாளர் மார்செலோ செலுட்டி தெரிவித்தார்.
 
இன்னொரு வானியல் ஆய்வாளர் ஜோஸிலியா பிகோரிம் கருத்து தெரிவிக்கையில், பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா மற்றும் ஏக்கரில் இருந்தும், பக்கத்திலுள்ள பொலிவியா மற்றும் பராகுவேயிலும் நிகழ்ந்த பெரிய தீ சம்பவங்களால் புகை தென் பகுதிக்கு செல்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று கூறினார்.