1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (21:14 IST)

கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்

Born Child
தமிழகத்தையே அதிர வைத்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே.பாறைபட்டி பெண் சிசுக்கொலை விவகாரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
 
அப்போது, பெண் பிள்ளைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் விரும்பப்படுவதால் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால், எருக்கம் பால், சுனையுள்ள நெல்லைத்தொண்டைக் குழியில் திணித்துக் கொன்ற காலம் போய் இப்போது, கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று நவீன ஸ்கேன் மூலம் பார்த்து கலைத்துவிடுகின்றனர்.
 
அப்படி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் தனியாக வீடு எடுத்து இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறியும் வேலை இங்கு நடந்துள்ளது. மேலும், அதில் கருவில் இருப்பது பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வது உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல, கள்ளக்குறிச்சியிலும் கைது நடவடிக்கை நடந்துள்ளது. இவர்கள், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி எனப் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, “தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் வேலை நடைபெற்று வருவதாக மாநில கண்காணிப்புக் குழுவின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது,” என்று தெரிவித்தார்.
 
அந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் மாநில கண்காணிப்புக் குழுவினர் அடங்கிய மருத்துவக் குழுவினர் செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டில் தீடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
 
“அப்போது தர்மபுரி அழகாபுரியைச் சேர்ந்த, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய கற்பகம் (38) என்பவர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாலின பரிசோதனை செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டதாக” மருத்துவர் சாந்தி தெரிவித்தார்.
 
இந்த சட்ட விரோத செயல்களைச் செய்து வந்த, கற்பகம், இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (35), இடைத்தரகர் சிலம்பரசன் (31), ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களைக் கைது செய்த அதிகாரிகள் காரிமங்கலம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 
இதையடுத்து “காரிமங்கலம் போலீசார் சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்து வந்த கும்பலை கைது செய்து, அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், 4 செல்போன்கள்,
 
2 சொகுசு கார் 1 ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது,” என்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி கூறினார்.
 
கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்பட மூலாதாரம்,GETTY IMAGES
“கடந்த 2022 மே மாதம் தர்மபுரி அடுத்த ராஜாபேட்டையில் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்ய, கருப்பையில் கற்பகம் மாத்திரையை வைத்துள்ளார்.
 
ஆனால், அந்த முயற்சி பலனளிக்காமல் அதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,” என்றும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
 
இதுபோல் கற்பகம் என்ற செவிலியர் தொடர்ச்சியாக சட்டவிரோத கருக்கலைப்பு செயல்களில் ஈடுபட்டு வருவதாக இணை இயக்குநர் சாந்தி கூறுகிறார்.
 
மேலும், “மாவட்ட நிர்வாகமும், கண்காணிப்புக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற சம்பவங்களை தடுத்து வருகிறது. ஏற்கெனவே மொரப்பூர் பகுதியில் இதுபோன்ற ஆபரேஷன் ஒன்றை நடத்தி தடுத்துள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மாநில கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவ சட்டங்கள் நிர்வாக அலுவலர் கமலக்கண்ணனிடம் பேசினோம்.
 
“கற்பகம் ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும்” அவர் கூறினார்.
 
இந்நிலையில், அவருடைய செயல்பாடுகளைக் கண்காணித்து, தீவிர கண்காணிப்பில் இருந்ததாகவும் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 
 
கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்பட மூலாதாரம்,GETTY IMAGES
“அவர்கள் எங்கு வீடு எடுத்துள்ளனர், எப்படி அழைத்துச் செல்கின்றனர் என்றெல்லாம் கண்காணித்து இந்த ஆபரேஷனை எப்படி செயல்படுத்துவது என்று திட்டமிட்டு இருந்தோம். அதற்காக இரண்டு குழுக்களாகச் செயல்பட்டோம்.
 
ஒரு குழுவில் கர்ப்பிணி பெண்களைத் தேர்வு செய்து அவர்களை பரிசோதனைக்கு அனுப்புவதற்குத் தயார் செய்தோம். அந்த கும்பலுக்கு நம்பகத்தன்மையை வர வைத்தோம்.
 
அதன்படி, தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக காக்க வைத்திருந்து அதன் பிறகு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்,” சட்டவிரோத கருக்கலைப்பு கும்பலைக் கைது செய்தது குறித்து கமலக்கண்ணன் விளக்கினார்.
 
அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, செம்மண் குழி மேடு பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாந்தோப்பில் ஒரு வீட்டைத் தேர்வு செய்து அதில் பெட்ரூம் மட்டும் வாடகை எடுத்து இந்தத் தொழிலை அவர் செய்து வந்ததை கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.
 
“இதற்கு மூலமாகச் செயல்படுவது கற்பகம் அவருடைய கணவர் விஜயகுமார் மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ்குமார். சதீஷ்குமார் தான் ஸ்கேன் மெஷின் வாங்கிக் கொடுப்பது, விற்பது போன்ற வேலைகளைச் செய்பவர்.
 
ஒரு நபருக்கு 12,000 ரூபாய் வசூல் செய்கிறார்கள். நாங்கள் கைது செய்தபோது மட்டும் ஏழு பேர் பரிசோதிக்க வந்திருந்தனர். கற்பகம் என்பவர் ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்துள்ளார். அதைப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர்மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்,” என்றும் அவர் கூறினார்.
 
 
கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்
 
மேலும், இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கும்பல், கருவின் பாலினத்தைக் கண்டறிந்து பெண் சிசுவைக் கலைக்கும் சட்டவிரோத வேலையைச் செய்து வந்ததாகவும் அவர்களைக் கண்காணித்து பிடிக்க முயன்ற நேரத்தில் தப்பிவிட்டதாகவும் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 
அப்படி தப்பிக்கும்போது ஸ்கேன் கருவியை கரும்புத் தோட்டத்தில் வைத்து சுக்குநூறாக உடைத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
 
“ஏற்கெனவே இதுபோன்ற சட்டவிரோத செயலில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளனர். இதுவொரு பெரிய நெட்வொர்க். ஓரிடத்தில் பிடித்தால் வேறொரு இடத்தில் தொடங்குகிறார்கள். ஆகவே தீவிர கண்காணிப்பில் இருக்கிறோம்,” என்கிறார் கமலக்கண்ணன்.
 
கண்களைக் கட்டி பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிகள்
இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை சார்ந்து இயங்கி வரும் ரியல் என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குநர் செந்தில் ராஜாவிடம் பேசியபோது, கடந்த ஆண்டு இதே கும்பல் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்.
 
“காரில் ஸ்கேன் இயந்திரத்தை எடுத்து வந்து பரிசோதனை செய்து, கருவின் பாலினத்தைத் தெரிவிக்கும் சட்டவிரோத வேலையை அவர்கள் செய்து வந்தனர். இதற்கு உடந்தையாகப் பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதும் அவர்கள் மூலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கர்ப்பிணிகளை அழைத்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று செந்தில் ராஜா கூறுகிறார்.
 
இந்தச் சம்பவங்களின்போது இடைத்தரகர்கள் மூலம் பாலினத்தைக் கண்டறிய வரும் கர்ப்பிணிகளுக்கு கண்கள் கட்டப்பட்டு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கடந்த ஆண்டு காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
 
அப்போது, அப்படி அழைத்து வரும் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.2000 வாடகை, சிசுவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.6000, கருக்கலைப்பிற்கு ரூ.15,000 என வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
 
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த கற்பகம் தற்போது மீண்டும் அதே செயலில் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிடும் செந்தில் ராஜா, இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, இத்தகைய குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
குழந்தை பிரசவித்த திருநம்பி தந்தை, தாயான திருநங்கை காதலி: சிசுவின் பாலினத்தை வெளியிட மறுப்பு
 
கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தோழி கூட்டமைப்பின் இயக்குநர் சங்கர், “இத்தகைய கடும் குற்றங்களின் விளைவை பிறப்பு பாலின விகிதத்தில் எதிரொலிக்கும். தருமபுரி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கு இத்தகைய குற்றங்கள் காரணமாகின்றன,” என்று கூறுகிறார்.
 
மேலும், “தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்புக் குழு இருக்கும். அதைக் கண்காணிப்பது இணை இயக்குநரின் பணி. மாவட்ட, தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி அரசு, தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள் குறித்துக் கண்காணிக்க வேண்டும்.
 
ஸ்கேன் மையங்களைத் தீவிரமாகக் கண்காணித்து மாதவாரியாக அறிக்கை வழங்க வேண்டும். அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். ஆனால், இப்படியொரு குழு இருக்கிறதா இல்லையா என்பதே பலருக்கும் தெரிவதில்லை.
 
இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, பெண் சிசுக் கொலையைத் தடுத்து பெண் குழந்தைகளின் விகிதத்தை உயர்த்த வேண்டும்,” என்று ஆதங்கப்படுகிறார் தோழி கூட்டமைப்பின் இயக்குநர் சங்கர்.
 
மாநில அளவில் இத்தகைய கண்காணிப்புக் குழுக்களுக்கு என ஒரு டிஎஸ்பி இருப்பதாகவும் அவர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், காவல்துறை அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபர் இயேசுபாதம் பிபிசி தமிழிடம் கூறினார்.
 
“கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் குற்றவாளிகளைப் பிடிக்க, கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்குச் செல்வது போல் ஆபரேஷனை நடத்தி கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்” அவர் கூறினார்.
 
அத்தகைய ஆபரேஷன் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறும் அவர், இந்தக் கும்பலை மருத்துவக் குழுவுடன் சேர்ந்து கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
 
கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பலை பிடிக்க உதவிய சிறப்பு ஆபரேஷன்பட மூலாதாரம்,GETTY IMAGES
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி இதுகுறித்துப் பேசும்போது, “பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடைச் சட்டம் 1994ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கரு என்ற வார்த்தை முதன்முதலாக சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டது.
 
ஒரு பெண்ணின் கருப்பையில், சினைமுட்டையுடன் விந்தணு இணைந்த எட்டாவது வாரத்தில், அதாவது 57வது நாளில் இருந்து குழந்தை பிறக்கும்வரை அது கரு என வரையறுக்கப்பட்டது,” என்று கூறினார்.
 
பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே விரும்பும் சமுதாயத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணின் கருப்பை திரவம் சோதனை செய்யப்பட்டு, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருவைக் கலைத்துவிடும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
 
அதைத் தடுப்பதற்காக, “கரு உருவாவதற்கு முன்னதாகவோ, பிறகோ பாலின தேர்வைத் தடை செய்யவும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் தொழில்நுட்பத்தைச் சீரமைக்கவும், பரம்பரை மாறுபாடுகள், வளர்ச்சிதை மாறுபாடுகள், குரோமோசோம் மாறுபாடுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்காகச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளை முறைப்படுத்தவும் இந்தச் சட்டம் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது,” என்று விளக்கினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி.
 
மேலும், “பெண் சிசுக்களைக் கொல்வதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை மீறும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி, இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளும் விதத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.