திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மதுரை நகரமைப்பு பிரிவில் ஊழல் நடப்பதாகவும், இதற்கு எதிராக போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது என்றும், மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், "திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இந்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்," என்று செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறினார்.
திமுக அரசு கடந்த நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போது திறந்து வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
முதல்வர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்தாலும், அடுத்த ஆட்சி அதிமுக தான் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமைகளாக செயல்படுவதால் தான், அதிமுகவை அவர்கள் விமர்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Edited by Mahendran