1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (21:40 IST)

இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு; பாரிய சோதனை முன்னெடுப்பு

கொழும்பு புறநகர் பகுதியான புகொடை பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 அளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
 
புகொடை பகுதியிலுள்ள கட்டிடமொன்றிற்கு பின்புறமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
வெடிப்பினால் எந்தவொரு நபருக்கோ அல்லது சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த வெடிப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பாதுகாப்பு பிரிவினர் முழுமையான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில், இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பல பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
கொழும்பு, நீர்கொழும்பு, மாவனெல்ல, பதுளை உள்ளிட்ட மேலும் பல முக்கிய நகரங்களில் இந்த பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
குறிப்பாக வீடுகள், கட்டிடங்கள், பொது போக்குவரத்து சேவைகளிலிருந்து மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடுகின்றனர்.
 
இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பதற்றமடைய வேண்டிய தேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உயிரிழந்த வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்
 
இதனிடையே, இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 36 என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் அதிகளவில் இலங்கை பிரஜைகளே உயிரிழந்திருந்தார்கள்.
 
அதற்கு அடுத்தப்படியாக இந்திய பிரஜைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
 
உயிரிழந்த வெளிநாட்டவர்களின் விபரங்கள்.
 
1. இந்தியா - 11 பேர்
 
02. பிரித்தானிய - 6 பேர்
 
03. டென்மார்க் - 3 பேர்
 
04. துருக்கி - 2 பேர்
 
05. பிரித்தானியா மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை - 2 பேர்
 
06. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமை - 2 பேர்
 
07. சீனா - 2 பேர்
 
08. செளதி அரேபியா - 2 பேர்
 
09. பங்களதேஷ் - 01
 
10. ஜப்பான் - 01
 
11. நெர்லாந்து - 01
 
12. போர்த்துக்கல் - 01
 
13. ஸ்பெயின் - 01
 
14. அமெரிக்கா - 01
 
இதேவேளை, சில வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும், 14 வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
12 வெளிநாட்டவர்கள் தேசிய வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
 
ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை
இலங்கையில் உடனடியாக அமலுக்குவரும் வகையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சிவில் விமான சேவை அதிகார சபை இந்த அறிவுறுத்தலை இன்று ( வியாழக்கிழமை) விடுத்துள்ளது.
 
இந்த நிலையில், இலங்கையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் உடன் அமலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
 
இதன்படி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சிவில் விமான சேவை அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
 
அவசரகாலச் சட்டத்து நாடாளுமன்றம் அனுமதி
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் விடுதிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.
 
முதலில் நாட்டில் நிலவிய அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் 22-ம் தேதி நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
 
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) ஒருமனதாக அனுமதி வழங்கியது.