வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (12:11 IST)

பாகிஸ்தானுக்குள் புகுந்து வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானிகள் இவர்கள்தானா?

பாகிஸ்தானிற்குள் செவ்வாய்க்கிழமை போர் விமான தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள்தான் என்று இந்திய விமானப்படை வீரர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படங்கள் சமூக ஊடக குழுக்களிலும், வாட்ஸ்-ஆப் குழுக்களிலும் பல்லாயிரம் முறை பகிரப்பட்டு வருகின்றன.
 
இந்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையின் இரண்டு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக புதன்கிழமை பாகிஸ்தான் கூறியது.
 
ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாகவும் அதன் விமானி கைது செய்யப்பட்டார் என்றும் பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
 
ஒரு விமானியை காணவில்லை என்று இந்தியாவும் உறுதி செய்தது.
 
பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய துணை ராணுவ படை மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் தொடுத்ததில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பலியானர்கள். அதனை அடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.
 
'பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துகிறது' - இந்திய விமானி அபிநந்தன்
இதற்கு மத்தியில் பல இந்திய சமூக ஊடகங்கள் இந்திய விமானப் படை வீரர்கள் படங்களை பகிர தொடங்கின.
 
ஆனால், இந்த புகைப்படங்களுக்கும் பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்டதாக கூறப்படும் வான் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 
பாகிஸ்தானில் வான் தாக்குதல் நடத்தியவர் இவர்தான் என்று கையில் ஹெல்மட் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
 
அந்த பெண்ணின் பெயர் அனிதா ஷர்மா என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த பதிவுகளில், "#AnitaSharma துணிச்சலான இந்த வீரரை வாழ்த்துங்கள். பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் இருந்த ஒரே பெண் இவர்தான்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய ராணுவமோ, இந்த விமானப் படையோ இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் ராணுவ நடவடிக்கையில் பங்காற்றிய ராணுவத்தினரின் பெயர்களை வெளியிடமாட்டார்கள்.
 
சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் அவனி சதுர்வேதி. இந்தியாவின் பெண் போர் விமானிகளில் ஒருவர்.
 
அதுமட்டுமல்ல, துணை விமானி இல்லாமல் போர் விமாங்களை தனியாக இயக்கும் முதல் பெண் விமானியும் இவர்தான்.
மற்றொரு புகைப்படத்தில் இருப்பவர் ஸ்நேகா சகாவத். 2012ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா விமானப் படை பிரிவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார்.
ஆனால் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்பில் ஸ்நேகாவின் புகைப்படம் ஊர்வசி ஜரிவாலா என்ற பெயரில் தவறாக பகிரப்படுகிறது. மேலும் அவர், சூரத்தில் உள்ள புல்கா பவனில் படித்தவரென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஸ்நேகா தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கு 2007ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பெண் விமானி என ஹைதராபாத் பயிற்சி மைய விருதை பெற்றார். ஸ்நேகா ராஜஸ்தான் ஷேகாவதி பகுதியை சேர்ந்தவர்.
 
மூன்றாவது புகைப்படம்
புல்வாமா தக்குதலுக்கு பழிவாங்கிய போர் விமானிகள் 12 பேர் இவர்கள்தான் என ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது.
 
புகைப்படத்தை ஆராயும் தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ந்ததில் அந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு நடந்த இந்திராதனுஷ் பயிற்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ராயல் விமானப் படையும், இந்திய விமானப் படையும் இணைந்து அந்த 10 நாள் பயிற்சியை மேற்கொண்டன.