வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (13:37 IST)

அமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி

இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும்.
நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன.
 
'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பில் உள்ளது.
 
சூழலியலாளர் டேவ் ஷ்னைடர் மற்றும் அவரது நண்பர் டேவிட் ஆகஸ்டு 25 அன்று பைன் பேரன்ஸ் எனும் காட்டுப் பகுதியில் விரியன் பாம்பு ஒன்று குட்டி போடுவதை கண்காணிக்கச் சென்றபோது, இந்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி பிறந்ததைக் கண்டுபிடித்தனர்.
 
இவர்கள் இருவரின் பெயரை ஒட்டியே அந்தப் பாம்புக்கு டபுள் டேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தப் பாம்பு காட்டுக்குள் தானாகவே வாழ்வது மிகவும் கடினமானது என்கிறார் டேவ் ஷ்னைடர்.
 
வேட்டை விலங்குகளிடம் இருந்து இந்தப் பாம்புக்குட்டி தப்ப முயன்றால் தலைகள் ஒன்றுடன் ஒன்றாக மோதலாம் என்பதால் இவை தப்பித்து உயிர் வாழ்வது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே கருவில் இருந்து வளர்ந்து இரண்டாகப் பிரிவதைப் போலவே இரட்டைத் தலை பாம்புகளும் கருவில் உருவாகின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்த அரிய பாம்பைத் தாங்கள் வைத்துப் பராமரிக்க அந்த சூழலியல் அமைப்பினர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர்.