1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (21:14 IST)

அமெரிக்கா ஏவுகணை பரிசோதனை - ரஷ்ய அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி

தாம் மேற்கொண்ட மத்திய தூர சீரியங்கு ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகம் வெளியிட்ட படம்.
மத்திய தூர சீரியங்கு ஏவுகணை ஒன்றை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது.
 
கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
 
இத்தகைய சோதனைகளை தடை செய்யும் வகையில், ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இம்மாதம் 2-ம் தேதி அமெரிக்கா விலகியது. இதையடுத்து, தற்போது இந்த சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
 
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.
 
500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.
 
தற்போதைய சோதனை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யா, ராணுவப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிப்பதாக கூறியுள்ளது.
 
ரஷ்யாவின் 9M729 ஏவுகணை. இதைக் காரணம் காட்டித்தான் அமெரிக்கா ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.
 
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்த முறிவு புதிய ஆயுதப் போட்டியை தூண்டும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள சேன் நிக்கோலஸ் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை அணு ஆயுதம் ஏந்திச் செல்லக்கூடியது அல்ல என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.