திரைப்படம் 90 எம்எல்
நடிகர்கள் ஓவியா, ஆன்சன் பால், ஸ்ரீ கோபிகா, தேஜ்தேஜ், பொம்பு லட்சுமி, மசூம் சங்கர், சிலம்பரசன், தேவதர்ஷிணி
இசை சிலம்பரசன்
இயக்கம் அனிதா உதீப்
'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட சில படங்கள் ட்ரெய்லர்களின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, முழுப் படத்தில் ஏமாற்றத்தை அளித்தவை. இந்தப் படமும் அதே ரகம். படத்தில் உள்ள "அடல்ட்ஸ் ஒன்லி" ரக அம்சங்கள் எல்லாம் ட்ரெய்லரிலேயே தொகுக்கப்பட்டுவிட்டதால், எதிர்பார்த்து வருபவர்களுக்கு படத்தில் புதிதாக ஏதும் இல்லை.
வெவ்வேறு பிரச்சனைகளுடன் வாழும் நான்கு பெண்கள், துணிச்சலான ஒரு பெண்ணை சந்திக்கும்போது தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டடைகிறார்கள். புதிதாக ஒரு ஃப்ளாட்டிற்கு குடியேறும் ரீட்டா (ஓவியா), அங்கே தாமரை (பொம்மு லட்சுமி), காஜல் (மசூம்), பாரு (ஸ்ரீ கோபிகா), சுகன்யா (மோனிஷா) ஆகிய நான்கு பெண்களுடன் நெருக்கமாகிறாள். தாமரையின் கணவன் ஒரு ரவுடி. காஜலின் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளரான பாருவின் காதலிக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது; அவளை மீட்க வேண்டும். சுகன்யாவின் கணவன் விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்டிருப்பதால், அவளைத் தொடுவதேயில்லை. இதற்கு நடுவில் ரீட்டாவின் காதலன் பிரிந்துசென்றுவிடுகிறான். இத்தனை பிரச்சனைகளும் எப்படித் தீர்கின்றன என்பது மீதக் கதை.
படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை படத்தில் வரும் முக்கியப் பாத்திரங்கள் ஐந்து பேரும் குடித்துக்கொண்டேயிருக்கிறார்கள். பிறகு ஒருகட்டத்தில் கஞ்சா அடிக்க ஆரம்பிக்கிறார்கள். இரவு நேரங்களில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுகிறார்கள். போதையில் சினிமா திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இவர்கள்தான் காரணமோ என்று தோன்றுகிறது. படத்தின் இயக்குனருக்கும் அப்படித் தோன்றியிருக்க வேண்டும். அதனால், தாமரையை குடி, கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்க அவளுடைய ரவுடி கணவனே, அவளை ஒரு மனநல நிபுணரிடம் அழைத்துவந்துவிடுகிறான். இப்படித்தான் முழுப் படமும் செல்கிறது.
செக்ஸ் குறித்து பெண்கள் வெளிப்படையாகப் பேசுவது நிச்சயம் 'க்ளிக்' ஆகும் என்ற நம்பிக்கையில் படத்தில் ஆங்காங்கே அம்மாதிரி வசனங்களை வைத்து, நொந்து போயிருக்கும் ரசிகர்களை சற்று நிமிர்ந்து உட்காரவைக்கிறார் இயக்குனர்.
படத்தில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆனால், எந்தப் பிரச்சனையோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. எல்லாக் காட்சிகளும் மேலோட்டமாக கடந்துசெல்கின்றன. முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள்கூட பல தருணங்களில் செயற்கையாக இருக்கின்றன.
ஆண்களுக்கிடையிலான தன்பாலின ஈர்ப்பை காட்சியாக்கிய படங்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், பெண்கள் முத்தமிடும் காட்சியின் மூலம் புதிய துவக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் படம். மற்றபடி எந்த வகையிலும் குறிப்பிடத்தக்க படமாக இது அமையவில்லை.
படத்தின் இசை சிலம்பரசன். ஒரே ஒரு பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனால், படு மோசமான பின்னணி இசை.
படத்தின் நாயகியான ஓவியாவுக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்த வரவேற்பை இந்தப் படம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.