திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (18:08 IST)

எட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்: வசூலைப் பாதிக்காதா?

இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை.


 
இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, வளையல், நுங்கம்பாக்கம், தொரட்டி, ரீல், மயூரன் ஆகிய படங்கள் வெளியாவதாக திங்கள் கிழமையன்று நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.
 
ஆனால், செவ்வாய்க்கிழமையன்று இதிலிருந்து சில திரைப்படங்கள் பின்வாங்கிவிட கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, மயூரன், தொரட்டி ஆகிய படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.
 
இதில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ஜோதிகா நடித்த ஜாக்பாட், கிருஷ்ணா நடித்த கழுகு - 2 ஆகியவை சற்று பெரிய பட்ஜெட் படங்கள். இது தவிர, ஹாலிவுட் படமான Fast and Furious: Hobbs & Shaw படத்தின் மொழியாக்கமும் வெளியாகிறது.


 
இதனால், பல படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது தயாரிப்பாளர்களின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
"எப்போதுமே ஒரு வாரத்தில் 3 படங்களுக்கு மேல் வெளியானால் பிரச்சனைதான். இம்மாதிரி அதிக படங்கள் வெளியாவது நிச்சயம் திரைத்துறைக்கு நல்லதில்லை. தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாக பெரிய நெருக்கடியை இது ஏற்படுத்தும்" என்கிறார் தமிழகத் திரைத் துறையை நீண்ட காலமாகக் கவனித்துவரும் விமர்சகரான ஸ்ரீதர் பிள்ளை.
 
கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே இம்மாதிரி அதிகப் படங்கள் வெளியாவது நடக்கிறது என்கிறார் ஸ்ரீதர் பிள்ளை.
 
ஃபிலிமில் படங்கள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் கேமராக்கள் பிரபலமான நிலையில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் திரைப்படங்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியாக ஆரம்பித்தன என்கிறார் ப்ளூ ஓசன் ஃபில்ம் அன்ட் டெலிவிஷன் டெக்னாலஜி அகாடெமியின் (பாஃப்டா) நிறுவனர் டாக்டர் தனஞ்சயன்.


 
இப்படி ஒரே வாரத்தில் அதிக திரைப்படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் கவுன்சில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, ஒரு வாரத்தில் இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாதத்தில் ஒருவாரம் சிறிய படங்களுக்கு என ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பல தயாரிப்பாளர்கள் இதனை மீறி தங்கள் படங்களை, தங்களுக்கு வசதியான வாரங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள்.
 
"யாரையும் திரைப்படங்களைத் தயாரிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே, அவரவர் அவரவருக்கு வசதியான வாரங்களில் படங்களை வெளியிடுகிறார்கள். இது தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏற்க முடியாதவை. எந்த வாரத்தில் படத்தை வெளியிடுவது என்பதைத் தயாரிப்பாளர்தான் தீர்மானிக்க முடியும். ஏனென்றால் அவருடைய பணம்தான் அதில் முடங்கியிருக்கிறது" என்கிறார் தனஞ்சயன்.
 
வரும் பத்தாம் தேதி அஜீத் நடித்த 'நேர் கொண்ட பார்வை' வெளியாகிறது. அதற்குப் பிறகு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஐ முன்னிறுத்தி மேலும் பல படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன. ஆகவே வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியை விட்டுவிட்டால் அதற்கடுத்து மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டுமென்பதால்தான் பலரும் இந்த வாரத்தில் படங்களை வெளியிடுவதில் மும்முரம் காட்டுகிறார்கள்.
 
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை வருடத்திற்கு 100 முதல் 120வது படங்களை வெளியிட்டால் மட்டுமே தயாரிப்பாளர்கள் தப்பிக்க முடியும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறியிருக்கிறது.
 
2017ம் ஆண்டில் மட்டும் 198 நேரடி தமிழப் படங்கள் வெளியாகின. 2018ஆம் ஆண்டில் 180 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதுதவிர, பிற மொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள், பிற மொழிப் படங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால், தோராயமாக ஒரு வருடத்தில் 220 படங்களுக்கு மேல் வெளியாகின்றன.
 
2019ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளையும் மிஞ்சும் வகையில் படங்கள் வெளியாகிவருகின்றன. ஜூலை 26ஆம் தேதிவரை மட்டும் 123 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன.
 
"முன்பெல்லாம் தம்முடைய படத்திற்கு எது சரியான வாரம் என்று பார்த்து படங்களை வெளியிடுவார்கள். ஆனால், இப்போது அதையெல்லாம் பார்ப்பதற்கே முடியாது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 220 படங்களைத் தயாரிக்கிறார்கள். அதில் 200 படங்களை வெளியிட முயற்சிக்கிறார்கள். யாரை வேண்டாமென்று சொல்ல முடியும்?" என்கிறார் தனஞ்சயன்.
 
இந்த வாரம் நான் தயாரித்த படம் வெளியாகிறது; அதனால் அடுத்த வாரம் உங்கள் படத்தை வெளியிட்டுக்கொள்ளுங்கள் என்றுகூட ஒரு தயாரிப்பாளரால் இன்னொரு தயாரிப்பாளரைக் கேட்கும் நிலை இப்போது இல்லை. காரணம், பல தயாரிப்பாளர்கள் ஒன்றிரண்டு படங்களோடு துறையை விட்டே வெளியேறிவிடுகிறார்கள். எந்தப் படத்திற்கு யார் தயாரிப்பாளர் என்பதுகூடத் தெரியாது. இதெல்லாம் சேர்ந்துதான் பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறது என்கிறார் ஸ்ரீதர் பிள்ளை.
 
ஆனால், வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை குறித்து தெளிவுவரும்; ஏழு படங்களும் வெளியாகாது என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.