52 கோடி ஆண்டுகள் பழமை: வியக்க வைக்கும் புதைப்படிவ குவியல்

Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (21:17 IST)
சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது.
 
அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரிகளில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதால் இதை 'பிராமிக்கதக்க' கண்டுபிடிப்பு என்று புதை படிவவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
குயிங்ஜியாங் பயோடா என அறியப்படும் இந்த புதை படிவங்கள், சீனாவின் ஹூபி மாகாணத்திலுள்ள டான்ஷூய் ஆற்றின் அருகே சேகரிக்கப்பட்டன.
 
டான்ஷூய் ஆற்றங்கரையில் 20,000க்கும் மேற்பட்ட படிவங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிவங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
 
இந்தப் புதைபடிவங்கள் பெரும்பாலும் மென்தோல் உயிரிகளுடையவை என்பதால் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ராபர்ட் கெயின்ஸ் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :