வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (09:59 IST)

ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
 
வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
 
உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது.
 
ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
 
இந்த வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதையும் காண்பிக்கின்றன.
 
இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.