மசூத் அஸ்கரை ஐநா கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போடும் சீனா

masuth
Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (11:01 IST)
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்த்து, ஆயுதத் தடை, பயணத் தடை விதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது.
1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளின் நிபந்தனைகளை ஏற்று இந்திய சிறையில் இருந்து அப்போதைய பாஜக அரசால் விடுவிக்கப்பட்ட மசூத் அஸ்கர், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
 
கடந்த மாதம் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 40 சி.ஆர்.பி.எஃப். படையினர் உயிரைப் பறித்த தற்கொலை கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் மசூத் அஸ்கர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை நிறுத்திவைக்கக் கோரியுள்ளது சீனா என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
 
புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அஸ்கரை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்மொழிந்தன.
 
ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான சீன தூதுக்குழு இந்த தீர்மானத்தின் மீது, 'தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்திவைக்கும்' வாய்ப்பை பிரயோகித்துள்ளது என்கிறது ராய்டர்ஸ்.
 
முன்னதாக கடந்த புதன்கிழமையன்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லு காங் இந்த விவகாரம் பற்றி பேசுகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் இந்த பிரச்சனை குறித்து விதிகளையும், அதற்கான நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி விவாதிக்கவேண்டும் என்றார்.
 
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அஸ்கர் மீது தடை கொண்டு வருவதற்கு 2016, 2017 ஆண்டுகளில் இந்தியா முயற்சித்த போதும் சீனா தடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்த்துவிட்டது.
 
மசூத் அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஆயுதத் தடை, பயணத் தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்திருத்தன.
 
இதைப் போல சீனா தொடர்ந்து செய்தால் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பாதுகாப்புக் குழுவில் வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்று பெயர் வெளியிடவிரும்பாத பாதுகாப்புக் கவுன்சில் தூதர் ஒருவர் கூறியதாகவும் ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்தியா ஏமாற்றம்
இதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
''மார்ச் 13, 2019-ல் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா தடை கமிட்டியில் மசூத் அஸ்கர் அல்வியை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான முன்மொழிவை ஓர் உறுப்புநாடு நிறுத்திவைத்ததால் இதன் மீது முடிவுக்கு வர முடியவில்லை.
 
இது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பது தற்போது தடுக்கப்பட்டுள்ளது'' என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது வெளியுறவு அமைச்சகம்.
 
''மசூத் அஸ்கர் மீது தடை விதிக்க முயற்சியெடுத்த மற்ற உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எங்களது குடிமக்கள் மீது நடந்த கொடிய தாக்குதலுக்கு நீதி கிடைக்க, இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்தியா தொடர்ந்து பயன்படுத்தும்'' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது வெளியுறவு அமைச்சகம்.

இதில் மேலும் படிக்கவும் :