வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (21:20 IST)

குழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள்

குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பொருளாதார வல்லுநர் நமக்கு என்ன கற்பிக்க முடியும்?
 
பேராசிரியர் எமலி ஆஸ்டர் குழந்தை வளர்ப்பு பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்பு செய்ததோடு, தரவுகளையும் ஆராய்ந்தார். அதன்படி கிடைத்த 13 முடிவுகள் இதோ.
தாய்மாரின் அன்றாட வாழ்க்கை கவலை நிறைந்ததாக இருக்கலாம். அவர்களிடம் பல கேள்விகள் உள்ளன; பாலூட்டும் காலகட்டத்தில் மது அருந்தலாமா? எவ்வளவு நேரம் பாலூட்டலாம்?
 
மருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், புத்தகங்கள், இணையம், அந்நியர்கள் என அனைவரிடம் இருந்தும் முரண்பட்ட அறிவுரைகள் அதிகம் உள்ளன. எனவே, எதனை நம்புவது, எதனை செயல்படுத்துவது என தெரியாமல் தாய்மார்கள் குழம்பிப்போயுள்ளனர்.
 
அமெரிக்காவின் பிரவுண் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் எமலி ஆஸ்டரும் கருத்தரித்து இருந்தபோது, பல்வேறு முரண்பட்ட அறிவுரைகளால் குழம்பி போய்விட்டார்.
 
அவர் பெற்றிருந்த புள்ளிவிவர பயிற்சியை பயன்படுத்தி, தானே மருத்துவ நூல்களை மீளாய்வு செய்ய அவர் முடிவு செய்தார். இதன் மூலம் Expecting Better, about do's and don'ts during pregnancy என்ற அவரது முதல் புத்தகத்திற்கு சான்றுகளை திரட்டினார்.
 
தரவுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பதற்கான சமீபத்திய புத்தகமான Cribsheet- லும், இந்த வழிமுறையை அவர் கையாண்டுள்ளார்.
 
நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பின்னர் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவர் வழங்கும் முக்கிய அறிவுரைகளை பார்ப்போம்.
 
01.பாலூட்டுவது எல்லா நோய்களுக்குமான மருந்தல்ல
 
"குறைவான ஒவ்வாமை, வீக்கங்கள், வயிற்று கோளாறுகள் மற்றும் காதில் உண்டாகும் நோய் தொற்றுகள் போன்ற சிலவற்றை குழந்தையை நன்றாக பேணுவதால் தவிர்க்க முடியும். ஆனால், நீண்ட கால நன்மைகளை வழங்குவதை காட்டும் தரவுகள் இல்லை. தாய் பாலூட்டப்பட்ட குழந்தைகள் சாமர்த்தியமானவை என்றோ, உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு ஆகியவற்றுக்கு குறைவான ஆபத்துகளை எதிர்கொள்கின்றன என்றோ சொல்வதற்கில்லை," என்கிறார் ஆஸ்டர்.
 
"ஆனால், தாய்ப் பாலூட்டுவது தாய்மாரின் சில வகையான மார்பக புற்றுநோய்களுக்கான ஆபத்தை குறைக்கவே செய்கின்றன. பல இடங்களில் பல்வேறு வகையான ஆய்வுகளில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தை குறைப்பதற்கு சுமார் 20% முதல் 30% வரை வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது."
 
02.தாய்ப் பாலுட்டும்போது சிறிதளவு மது அருந்தலாம்
 
தான் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பின்னர் "நீங்கள் மது அருந்துகிறபோது, உங்களுடைய ரத்தத்தில் உள்ள மது அளவைப் போலவே அந்த தாய் வழங்கும் பாலிலும் மது அளவு இருக்கும்" என்கிறார் ஆஸ்டர்.
 
"குழந்தை தாய் பாலை சாப்பிடுகிறது. மதுவை அது நேரடியாக குடிப்பதில்லை. எனவே குழந்தைகள் பெற்றுகொள்ளும் மதுவின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அதிக மது அருந்துவது ஒருபோதும் நல்லதல்ல என்பதால், ஒரு குவளை ஒயின் அல்லது பீயர் அருந்தினால் கவலைப்பட வேண்டியதில்லை.
 
"உங்கள் குழந்தைக்கு மதுவை காட்டி விடவே கூடாது என்று நீங்கள் அதிக கவனம் செலுத்தினால், நீங்கள் மது அருந்தினால் இரண்டு மணிநேரம் கழித்து, அதாவது நீங்கள் அருந்திய மதுவின் பாதிப்பு அகன்ற பின்னர் பாலூட்ட வேண்டும். இரண்டு முறை மது அருந்தியிருந்தால் நான்கு மணிநேரத்திற்கு பிறகு தாய்ப் பாலூட்ட வேண்டும்" என்று ஆஸ்டர் அறிவுறுத்துகிறார்..
 
03.மனச்சோர்வு நீக்கும் மருந்து
 
மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் எதுவானாலும் தாய்ப் பால் குடிக்கின்ற குழந்தைகளுக்கு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் இல்லை.
 
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு தீவிரமானது என்பதால் சிகிச்சை மிகவும் முக்கியமானதாகும்.
 
எந்தவொரு ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலும் உங்கள் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
 
04.பெற்றோரோடு ஒரே அறையில் இருக்கவேண்டும்
 
திடீர் குழந்தை இறப்பை தவிர்ப்பதற்கு, ஓராண்டு காலம், குறைந்தது ஆறு மாத காலம் பிறந்த குழந்தைகள் பெற்றோரின் அறையிலேயே இருக்க வேண்டுமென அமெரிக்க குழந்தைகள் மருத்துவக் கழகம் பரிந்துரைக்கிறது.
 
ஆனால், முதல் சில மாதங்களில் ஒரே அறையில் குழந்தை பெற்றோருடன் இருப்பதன் நன்மைகள் மறைந்து விடுவதாக ஆஸ்டர் தெரிவிக்கிறார்,
 
"உங்கள் குழந்தையோடு அறையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால் பகிர்ந்து கொள்ளலாம். தொடக்கத்தில் பெற்றோர் அறையில் பிறந்த குழந்தை இருப்பதை தரவுகள் நல்லது என்கின்றன. ஆனால், ஓராண்டு தங்கள் அறையில் வைத்திருந்து கண் விழித்து குழந்தையை கவனித்து, தியாகம் செய்ய வேண்டும் என்பது நீண்ட காலத்தில் நன்மை தருவதில்லை. இது நல்ல கொள்கையாகவும் இருக்காது." என்று ஆஸ்டர் தெரிவிக்கிறார்.
 
05.வயது வந்தவரோடு சோபாவில் குழந்தைகள் படுப்பது பாதுகாப்பானதா,?
 
"தூங்குகின்ற இடங்கள் பற்றி எல்லா ஆய்வுகளும், ஒன்றை குறிப்பாக தெரிவிக்கின்றன. ஒரு சோபாவில் வயது வந்தவரோடு குழந்தை படுத்திருந்தால் அடிப்படையில் இருக்கும் குழந்தை இறக்கும் விகித ஆபத்தைவிட 20 முதல் 60 மடங்கு அதிகமாக உள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாம்" என்று தெரிவிக்கப்படுகிறது.
 
06.குழந்தையை துணியால் சுற்றி வைக்க வேண்டுமா?
 
ஆம். "துணியால் சுற்றி வைப்பதால் அழுகை குறைந்து, தொடக்க மாதங்களில் குழந்தையை நன்றாக தூங்கலாம். குழந்தை அதன் கால்களையும், இடுப்பையும் அசைக்கின்ற விதமாக துணியால் சுற்றி வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்" என்ற ஆஸ்டர் தெரிவிக்கிறார்.
 
 
07.குழந்தை பிறந்த பின்னர் எப்போது உடலுறவு கொள்ளலாம்?
 
குழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் உடலுறவு வைத்துகொள்ளலாம் என்று குறிக்கப்பட்ட காலம் என்று எதுவும் இல்லை.
 
மகபேறுக்கு பின்னர் மருத்துவரிடம் சோதனை செய்த பின்னர், ஆறு மாதங்கள் வரை உடலுறவு வேண்டாம் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட விதியாகும்.
 
இதனை சான்றாக வைத்துகொண்டு அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால், இது வெறுமனே சொல்லப்பட்ட காலமாகும்" என்று ஆஸ்டர் தெரிவிக்கிறார்.
 
"குழந்தையை பெற்றெடுத்த பின்னர், மீண்டும் உடலுறவை வைத்துகொள்ள காத்திருக்க வேண்டிய நேரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. அறுவை சிகிச்சையாக இருந்தால், அந்த காயம் முற்றிலும் குணமாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்".
 
மகபேற்றுக்கு பிந்தைய முதல் பரிசோதனையில் உங்களுடைய மருத்துவர் இதனை சோதிப்பார் (சுமார் ஆறு மாதங்கள்). ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்னால் நீங்கள் முற்றிலும் குணமாகியிருந்தால் அதனை நீங்களே கூறலாம்" என்கிறார் ஆஸ்டர்.
 
08.தடுப்பூசிகள்: போடுவது அவசியம்
 
குழந்தைப்பருவ தடுப்பூசி உங்களுடைய குழந்தைகள் மற்றும் பிறரின் நோய் தடுப்புக்கு மிகவும் பாதுகாப்பானது.
 
09.வெளிப்படையாக அழுது, தூங்கும் பயிற்சி வேலை செய்கிறது.
நூற்றுக்கணக்கான குழந்தை வளர்ப்பு ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், ஆஸ்டர், "வெளிப்படையாக அழுது, தூங்கும் பயிற்சி முறைகள் செயல்திறன் மிக்கவை, தாயின் மனநலத்தை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு கேடு விளைவிப்பதில்லை. இது பற்றி குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை" என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
 
"தாயின் மனச்சோர்வை குறைப்பதற்கு தூக்க பயிற்சியும் நன்மை அளிப்பதாக அமையலாம். தூக்க பயிற்சி முறைகள் குழந்தை வளர்ப்பின் மனநலத்தை மேம்படுத்துகின்றன. இதனால் மனச்சோர்வு குறைகிறது. திருமணத்தில் அதிக திருப்தி ஏற்படுகிறது. குழந்தை வளர்ப்பினால் ஏற்படும் அழுத்தம் குறைகிறது".
 
10.வீட்டில் இருப்பதா அல்லது இல்லாமல் இருப்பதா?
 
"தாய்மார்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதில் குழந்தைகள் பயன் பெறுகின்றன. ஆனால், தாய் இவ்வாறு வீட்டில் இருப்பது குழந்தைகளிடம் நல்ல அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை தெரிவிக்கும் சான்றுகள் இல்லை" என்கிறார் ஆஸ்டர்.
 
11.பகல்நேரப் பராமரிப்பு இல்ல குழந்தைகள் தாய்மாரிடம் அதிக பாசமாக இல்லை
 
"இங்கு குழந்தை வளர்ப்பின் தரமே முக்கியமானது. பகல் நேரப் பராமரிப்பு இல்லத்தில் செலவிடப்படும் நேரத்தால் தாய்மாரிடம் குழந்தை பாசமாக இருப்பதில் எந்த வேறுபாடும் தோன்றுவதில்லை.
 
12.குழந்தைகள் தொலைக்காட்சியில் இருந்து கற்றுக்கொள்கின்றனவா?
 
இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் தொலைக்காட்சியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியாது.
 
"மூன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகள் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சொற்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாம்" என்கிறார் ஆஸ்டர்.
 
"தொலைக்காட்சி பார்ப்பது தேர்வு மதிப்பெண்களை பாதிப்பதில்லை. மிகவும் இளைய பருவத்திலேயே குறிப்பாக தொலைக்காட்சி பார்ப்பதால் தேர்வு மதிப்பெண்கள் பாதிக்கப்படுவதில்லை என்பதற்கு சிறந்த சான்றுகள் உள்ளன. ஆனால், திறன்மிகு (smart devices) கருவிகள் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் நேரம் பற்றிய தரவுகள் இன்னும் இல்லை" என்று ஆஸ்டர் தெரிவித்துள்ளார்.
 
13.குழந்தையோடு ஊடாடும் வாசிப்பு சிறந்தது.
 
"ஒரு புத்தகத்தை குழந்தைகளுக்கு வாசித்து காட்டுவதைவிட, பொதுவான கேள்விகளை கேட்கலாம்: அந்த பறவையின் தாய் எங்குள்ளதாக நினைக்கிறாய்?" என்பன போன்ற கேள்விகளை கேட்டு குழந்தைகளை பதில் சொல்ல வைப்பது அதிக பயன்தரும்.