புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (19:44 IST)

அமெரிக்காவில் பூனைகளுக்கு அன்பு காட்டியதால் சிறை தண்டனை பெற்ற மூதாட்டி!

பலமுறை எச்சரித்த பிறகும் உள்ளூர் சட்டத்தை மீறி ஆதரவற்ற பூனைக்கு உணவளித்த காரணத்தால் அமெரிக்காவை சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
நான்சி சென்குலா எனும் அந்த மூதாட்டியின் அண்டை வீட்டார் தங்களது பகுதியில் சுற்றித் தெரியும் ஆதரவற்ற பூனைகள் குறித்து 2015ஆம் ஆண்டு முதலே புகாரளித்து வருகின்றனர்.
 
தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிந்துக் கொண்ட பிறகு பாக்ஸ் 8 செய்தி நிறுவனத்திடம் பேசிய நான்சி, "எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
 
வரும் 11ஆம் தேதி முதல் நான்சி தனது 10 நாள் தண்டனை காலத்தை அனுபவிக்கத் தொடங்க வேண்டுமென்று ஒஹாயோவிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நான்சியின் செயல்பாட்டின் காரணமாக ஆதரவற்ற பூனைகள் கூடுவது எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அவருடைய அண்டை வீட்டார் கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து புகாரளித்து வருவதாக ஒஹாயோ மாகாணத்தின் கிளைவ்லேண்ட் பகுதிக்கு அருகிலுள்ள கார்பீல்டு ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


 
உள்ளூர் சட்டவிதியின்படி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறிய குற்றத்திற்காக, 2015 ஜூலையில் நான்சி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு மே மாதமும் இவர் மீது அதே போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
 
வலி நிவாரண மாத்திரைகளுக்கு அடிமையான பெண் அதிலிருந்து மீண்ட கதை
பல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை
2017ஆம் ஜூலை மாதம், தனது வீட்டில் அதிகளவிலான பூனைகள் வைத்திருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


 
அதைத்தொடர்ந்து, அவர் விலங்குகளின் கழிவுகளை நீக்குவதற்கு தவறிவிட்டார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின்போது, தான் இன்னமும் கூட பூனைகளுக்கு உணவளிப்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
 
"நான்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை அவர் கைது செய்யப்பட்டதே இல்லை" என்று அந்நகர காவல்துறையினர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். "சுமார் ஆறு முதல் எட்டு பெரிய பூனைகளும், அவ்வப்போது சில குட்டி பூனைகளும் எனது வீட்டை தேடி வருகின்றன" என்று சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாளிடம் பேசிய நான்சி தெரிவித்துள்ளார்.
 
"எனது அன்பிற்குரிய கணவர் மட்டுமின்றி எனது சொந்த பூனைகளும் உயிரிழந்துவிட்டன. தனிமையில் இருக்கும் எனக்கு இந்த பூனைகள் ஆதரவளிக்கின்றன "தொடர்ந்து எனது வீட்டை தேடி வரும் பூனைகளுக்கு, பரிதாபப்பட்டு உணவளிக்கத் தொடங்கினேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
தான் செய்த செயலுக்கும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கும் பொருத்தமில்லை என்று கூறும் நான்சி, தான் ஏற்கனவே $2,000 அபராதமாக செலுத்திவிட்டதாக கூறுகிறார். 
"சமூகத்தில் மிகவும் மோசமான செயலை பலர் செய்யும்போது, நான் செய்த செயலுக்கு இந்த தண்டனை மிகவும் அதிகமானது" என்று அவர் கூறுகிறார்.
 
"எனது அம்மாவுக்கு 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில், 79 வயதாகும் எனது அம்மாவையும் அடைக்கப் போகிறார்களா?" என்று நான்சியின் மகன் டேவ் பவ்லோஸ்கி.
 
ஆதரவற்ற பூனைகளுக்கு உணவளிப்பது தொடர்பாக நான்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து, தண்டனையை நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்பதை பார்க்கும் வரை இந்த பத்து நாள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்தும் நீதிமன்றம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
"விலங்குகள் அதுவும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் மீது பலர் அன்புடன் இருப்பதை அரசு அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அதே மனநிலையுடன் அனைவரும் இருப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது" என்று கூறுகிறார் உள்ளூர் நிர்வாகத்தின் வழக்கறிஞர் டிம் ரிலே.
 
இதுவரை, நான்சியின் வீட்டிலிருந்து 22 பூனைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.