பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய்விடும் – இளையராஜா
இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது புதிய ஸ்டுடியோவை திறந்துள்ளார். இதுகுறித்த பத்திரிக்கையாளரிடம் அவர் பேசும்போது, பிரசாத் ஸ்டுடியோ ஒருநாள் காணாமல் போய்விடும் எனக்கூறியுள்ளார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான அறையில் இளையராஜா தனது படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் அவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், வழக்கை திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெற்றதால் அவருக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், அங்குள்ள அவரது அறையிலிருந்த இளையராஜாவின் இசைக்கருவிகள் , விடுதுகள் எல்லாம் வெளியே எடுத்துவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையெல்லாம் இளையராஜா ஒருலாரியில் எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் பாலத்துக்கு அருகில் இருக்கும் எம் எம் தியேட்டரை வாங்கி அதை தனது புதிய ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார். இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த ஸ்டுடியோக்கள் எல்லாம் தற்போது காணாமல் போனதுபோல் பிரசாத் ஸ்டுடியோவும் ஒருநாள் காணாமல் போய்விடும் எனத் தெரிவித்தார். வெற்றிமாறனின் படத்திற்கு இங்கு இசையமைக்கவுள்ளார் இளையராஜா.
மேலும், பாடல்கள் நம்மைக் கவர்ந்திழுக்கவேண்டுமெனவும் இப்போது வரும் பாடல்கள் அப்படியில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.