1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (08:47 IST)

பளு தூக்குதலில் மட்டும் 4 பதக்கங்கள்..! – காமன்வெல்த்தில் மாஸ் காட்டிய இந்தியா!

Meerabhai sanu
இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் நேற்று பளு தூக்குதல் பிரிவில் இந்தியா பல பதக்கங்களை வென்றுள்ளது.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 72 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்க பதக்கம் இது.

அதுபோல ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட சங்கெத் மஹாதேவ் சர்கார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட பிந்த்யாராணி தேவியும் வெள்ளி பதக்கம் வென்றார்.

61 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் குருராஜ் பூஜாரி மொத்தம் 269 கிலோ பளுவை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். நேற்றைய ஒருநாளில் மட்டும் பளுதூக்குதலில் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.