திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (14:01 IST)

பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும்- டி.டி.வி.தினகரன்

ttv dinakaran
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்  சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே விதைத்து, பயிர் செய்து அதனை காப்பாற்றி வரும் விவசாயிகளின் நிலத்தில் டிராக்டரை விட்டு பயிர்களை அழித்து அவசர, அவசரமாக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

வேளாண் நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அது தேவையில்லை, விவசாயமே முக்கியம் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. ஆகவே, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.