செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (14:21 IST)

அதிமுக – பாஜக இடையே உரசல்.. கூட்டணியில் பிரச்சினையில்லை! – ஓபிஎஸ் அறிக்கை!

தமிழக பாஜக – அதிமுக பிரமுகர்கள் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் தோல்வியை தழுவி எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தேர்தல் தோல்வி குறித்து இரு கட்சிகளிடையே முரண்பாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் ”பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் “உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என கூறியுள்ளார்.

இதனால் பாஜக – அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடையே சமூக வலைதளங்களிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் “பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.