ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (20:40 IST)

சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் சம்மதம்? அதிமுக கூட்டத்தில் முடிவு!

அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நிபந்தனையின்றி சேர்க்கலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதலில் ஓபிஎஸ் தனியணியாக செல்ல, அதன் பின்னர் ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் இணைந்து தனி அணியாக சசிகலா புறக்கணிக்கப்பட்டார். தண்டனைக் காலத்தை சிறையில் கழித்து வந்த பின்னர் அவர் மீண்டும் கட்சியில் சேருவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஒரு தரப்பினர் அவர் சேர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அவரை சேர்க்கக் கூடாது என்றும் குரல் எழுப்பி வந்தனர். இதில் மெல்ல மெல்ல ஓபிஎஸ் சசிகலா ஆதரவாளராக மாறி வருவதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலின் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் மீண்டும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தேனியில் நடந்த ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இது சம்மந்தமாக ஆலோசிக்கபட்டதாகவும்,விரைவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை ஓபிஎஸ்-டம் கொடுத்து கையெழுத்து பெற முயற்சி செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஓபிஎஸ்-ம் அதற்கு சம்மதிப்பார் என்றுதான் கட்சிக்குள் பேசப்படுகிறது. ஆனால் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சசிகலா கட்சிக்குள் வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.