1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (15:12 IST)

சமூக விரோத கும்பலை அரசு காப்பாற்றுகிறதா? செய்தியாளர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
காஞ்சிபுரம் மாவ்ட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மோசஸ் அந்த பகுதியில் நடந்த குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி காவல் துறையினரிடம் புகார் அளித்ததால் ரௌடி கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். 
 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். சமூக விரோதக் கும்பல்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா? பத்திரிகைச் சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும். 
 
இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர் மீது உடனடி நடவடிக்கை தேவை. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும் என தெரிவித்துள்ளார்.  
 
அதோடு, இந்த கொலை சம்மந்தமாக போலிஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் முக்கியக் குற்றவாளி ஒருவரையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.