பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட தனது அறிக்கையில், "அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலம், நம் நாட்டின் முக்கிய பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எனவே, அந்த புதிய பாலத்திற்கு, ராமேஸ்வரம் என்ற புண்ணிய பூமியில் பிறந்து வளர்ந்த இந்தியாவின் அறிவியல் மேதை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், "பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகிற நிலையில், இந்த பாலத்திற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டுவதன் மூலம், இஸ்லாமிய சமூகத்திற்கும், ராமேஸ்வரத்தின் பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்க்கலாம். குறிப்பாக, ரமழான் மாதத்தில் இதுபோன்ற மரியாதை வழங்குவது, இஸ்லாமியர்களுக்கு ஒரு உயரிய அங்கீகாரமாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran