மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!
மியான்மர் நாட்டில் நேற்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பலியான உயிர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என்று வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 144 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 730க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. குறிப்பாக, 30 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, மலேசியா, வங்கதேசம், சீனா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய இந்தியா உதவி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran